/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கள் எழுத்துக்கு பெருமதிப்பு! 'தினமலர்' நாளிதழ் வாசகர்கள் நெகிழ்ச்சி
/
எங்கள் எழுத்துக்கு பெருமதிப்பு! 'தினமலர்' நாளிதழ் வாசகர்கள் நெகிழ்ச்சி
எங்கள் எழுத்துக்கு பெருமதிப்பு! 'தினமலர்' நாளிதழ் வாசகர்கள் நெகிழ்ச்சி
எங்கள் எழுத்துக்கு பெருமதிப்பு! 'தினமலர்' நாளிதழ் வாசகர்கள் நெகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2024 10:58 PM

'தினமலர்' நாளிதழின் ஆணிவேர்களாகத் திகழ்பவர்கள், மதிப்புவாய்ந்த வாசகர்கள். அதிகாலை, காபியின் வாசனையுடன், 'தினமலர்' நாளிதழும் சுவைக்கத் துணைக்கு வரும்; இதயத்துடன் நெருக்கமாக, வாசகரைக் கட்டிப்போடும். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை இல்லை; தீர்வுகளும் நிச்சயம் உண்டு. குடிநீர், தெருவிளக்கு, சாலை, போக்குவரத்து என்று தினந்தோறும் வாசகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்; 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இதழில், வாரம் இருநாட்கள் வெளியாகும் 'இன்பாக்ஸ்' பகுதிக்கு, 93454 84602 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு படத்துடன் பிரச்னைகளை அனுப்பிவைத்தால், அது பிரசுரமாகும். பலமுறை மனுக் கொடுத்தும், தீர்வு காணப்படாத பிரச்னைகள்கூட, வாசகர் சுட்டிக்காட்டியதும், ஓரிரு நாட்களுக்குள் உடனடித் தீர்வு காணப்படுகிறது. அதிகாரிகள், ஊழியர்கள் புடைசூழ அப்பகுதிக்கு வந்து பிரச்னைகளைக் களையும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 'இன்பாக்ஸ்' பகுதி, வாசகர்களின் எழுத்துக்கான மதிப்பையும், மாண்பையும் உணர்த்துகிறது. இதனால், வாசகர்களை, இப்பகுதி பெரிதும் கவர்கிறது; பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்போது, நெகிழ்ந்து போகின்றனர்!
புகார் மீது காலை 6:30 மணிக்கே
கலெக்டரின் அதிரடி நடவடிக்கை
கிறிஸ்துராஜ், கலெக்டர்:
சாலை வசதி இல்லை, சாலை மோசம் உள்ளிட்ட 'தின மலர்' நாளிதழில் வாசகர்கள் சுட்டிக்காட்டும், 'இன்பாக்ஸ்' பகுதியில் வரும் புகார்கள், காலை, 6:30 மணிக்குள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்படும். சுட்டிக்காடப்பட்டிருக்கும் புகார்களை, அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நானே நேரடியாக அனுப்பி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன். 'குறிப்பிட்ட ரோடு, நபார்டு திட்டத்தில் போடப்பட உள்ளது' அல்லது 'விரைந்து சரி செய்கிறோம்' என, அதிகாரிகளும், ஏற்கத்தக்க பதில், விளக்கங்கள் அளிக்கின்றனர். வாசகர் புகாரில் குறிப்பிடப்பட்ட பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
உடனடித் தீர்வு காண ஆர்வம்
மாநகராட்சி கமிஷனர் 'சாட்டை'
பவன்குமார், கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி:
'தினமலர்' நாளிதழில் 'இன்பாக்ஸ்' பகுதியில் வெளியாகும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார்கள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. உரிய பிரிவு அலுவலர்களுக்கு குறிப்பு அனுப்பி பிரச்னைக்கு தீர்வு காணப்படுகிறது. தீர்வு காணப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கிறேன். குப்பை, கழிவுநீர் தேக்கம், மழைநீர் புகுதல், குடிநீர் கசிவு உள்ளிட்ட புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிதி ஆதாரம் தேவைப்படும் பிரச்னைகள் குறித்து உரிய பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி, திட்ட அறிக்கை தயாரித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாலை முதல் வேலை
உரக்கச் சொல்கிறார் மேயர்
தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி:
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணி, தெருவிளக்கு பிரச்னை, ரோடு சேதம், குடிநீர் கசிவு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் தேங்குவது, ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் அவதி போன்ற பிரச்னைகள் குறித்து 'தினமலர்' நாளிதழ் வாசகர்களின் புகார்கள் பகுதியில் வெளியாகும் அனைத்து பிரச்னைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.அதிகாலையில் முதல் வேலையாக இதுபோன்ற புகார்கள் குறித்து குறிப்பெடுத்து, உரிய பிரிவு அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்களைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்படுகிறது. உடனடியாக மேற்கொள்ளப்படும் சீரமைப்பு, பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் அதே நாளில் செய்து முடிக்கப்படுகிறது. இந்த புகார் பகுதியில் வெளியாகும் தகவல்கள் செய்தியாக தொகுத்து, உரிய தீர்வு நடவடிக்கையும் அதில் பதிவு செய்யப்படுகிறது. நிதி ஆதாரம் தேவைப்படும் ெபரிய அளவிலான திட்டப்பணிகள் என்றால் அதுகுறித்தும் வார்டு கவுன்சிலர் தரப்பில் கருத்து கேட்டு, அதிகாரிகள் வாயிலாக திட்ட அறிக்கை தயார் செய்து, உரிய நிதி ஆதாரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மின் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை போன்ற பிற துறைகள் தொடர்புடைய புகார்கள் உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்
மின் செயற்பொறியாளர் 'வேகம்'
ராமச்சந்திரன், செயற்பொறியாளர், திருப்பூர் மின் கோட்டம்:
மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டிய, 'தினமலர்' நாளிதழில் 'இன்பாக்ஸ்' பகுதியில் வரும் பொதுமக்கள் புகார்களை தினமும் கண்காணிக்கிறோம். அலுவலர்கள், புகார்களைத் தனியே சமர்ப்பிப்பர். சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்கு, மெயில் அனுப்பி, தொலைபேசி வாயிலாகவும் தகவல் அளிக்கப்படும். புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, போட்டோவுடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படும். புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தெருவிளக்கு, பகலிலும் தொடர்ச்சியாக எரிவது, சில இடங்களில் எரியாமல் இருப்பது, மின்கம்பம் சேதம், மின்கம்பி தாழ்வாக செல்வது போன்ற புகார் அதிகம் வருகிறது. பராமரிப்பு பணியின் போது, மரம் வெட்டப்படுவதாகவும் புகார் பதிவாகிறது; இயன்றவரை, கம்பியில் உரசும் கிளைகளை மட்டுமே அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளோம். உடனடியாக தீர்வு காண முடியாத பிரச்னைகள் இருந்தாலும், உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காணப்படுகிறது.
சாலை பிரச்னைக்கு சரியான தீர்வு
நெடுஞ்சாலைத்துறையினர் 'விரைவு'
ராஜேஷ், உதவிப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, திருப்பூர் வடக்கு:
'தினமலர்' நாளிதழில் 'இன்பாக்ஸ்' பகுதியில் வரும் சாலை சேதம் குறித்து வாசகர்களின் புகார்களை தினசரி பார்த்து, அந்த இடங்களில் 'பேட்ஜ்ஒர்க்' செய்திட ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முக்கிய சந்திப்பு, சிக்னல், வாகன நெரிசல் உள்ள இடங்களில் ஒரே நாளிலும், பிற பகுதிகளில் மறுநாளும் உடனுக்குடன் சாலை பிரச்னை சரிசெய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக ஒலிக்கும் மக்கள் குரல்
நிதியாதாரம் இருந்தால் தீர்வு எளிது
அசோக்குமார், ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு, மாவட்ட செயலாளர்:
'தினமலர்' நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதி பொதுமக்களின் குரலை நேரடியாக ஒலிக்கிறது. அடிப்படை பிரச்னைகள் குறித்த புகார்கள் அன்றாடம் வரவே செய்கின்றன. குடிநீர் குழாய் உடைப்பு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளின் போது, அரசு துறைகளின் ஒத்துழைப்பு போதிய அளவு இல்லை. சிறு பிரச்னைகளாக இருந்தால், அந்தந்த ஊராட்சிகளே தலையிட்டு சரி செய்து கொள்ள முடியும். போதிய நிதி ஆதாரம் இன்றி பெரும்பாலான ஊராட்சிகள் திண்டாடுகின்றன. இக்குறைபாடுகளை சரி செய்தால், பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும்.