ADDED : செப் 12, 2024 08:41 PM

உடுமலை : ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் ஆர்வமுடன் கலைத்திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும், பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது. இதன்படி, உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடந்தது.
மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, நடனம், உள்ளிட்டவை நடந்தன. பள்ளி அளவில் ஒவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களை அடுத்தகட்ட போட்டிக்கு தயாராவதற்கு ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து உடுமலை தமிழிசை சங்கத்தில் பாடல் பாடிய மாணவர்கள் சரண்யா, சமிக்ஷா இருவருக்கும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வால்பாறை
வால்பாறையில் உள்ள, 51 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 18 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா நடக்கிறது.
வால்பாறை துாய இருதய ஆரம்ப பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவை, தலைமை ஆசிரியர் மேகலா துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் வீடியோவாக எடுத்து பதிவு செய்தனர்.
வால்பாறையில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் நடந்த கலைத்திருவிழாக்களை பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுத்து, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வட்டார அளவிலும், அதன்பின் மாவட்ட அளவிலும் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறுவார்கள்,' என்றனர்.