/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை'க்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
/
'போதை'க்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 26, 2024 10:43 PM

திருப்பூர் : போதைப்பொருள் ஒழிப்பு தினமான நேற்று பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பூர், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். தெற்கு துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ்யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களிடம் பேசினார்.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவ் தலைமை வகித்தார்.
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் அடுத்த, ஆறாக்குளம் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., விஜிகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா பேசுகையில், 'ஒவ்வொருவரும் அக்கறை செலுத்தினால், இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற முடியும். இது, போலீசாரின் வேலை மட்டும் கிடையாது. இது ஒரு சமுதாயத்தின் பணியாகும்' என்றார்.
பள்ளிகளில், 'போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். போதைப்பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன்.
குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்குவேன். போதை பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்' என மாணவ, மாணவியர் உறுதியேற்றனர்.
மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து, 'கள்ளச்சாராயத்தால் இன்றைய இன்பம், நாளைய துன்பம்; கள்ளச்சாராயத்தால் கண்பார்வையை இழக்க நேரிடும்' என்கிற வாசகங்கள் பொறித்த பதாகைகள் ஏந்தியவாறு, கல்லுாரி மாணவ, மாணவியர் ஊர்வலம் சென்றனர்.