/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்கு முன்பே அடைப்பு கழிவுநீர் செல்ல வழியில்லை
/
மழைக்கு முன்பே அடைப்பு கழிவுநீர் செல்ல வழியில்லை
ADDED : மே 11, 2024 12:18 AM

திருப்பூர்;கழிவு நீர் வடிகாலில் மக்காத கழிவுகள் தேங்கியதால் கழிவு நீர் செல்ல வழியின்றி ரோட்டில் உடைப்பெடுத்து ஓடியது.
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் பகுதியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வகையில் அங்கேரிபாளையம் ரோடு உள்ளது. அரசு ஊழியர் குடியிருப்பு, தனியார் பள்ளி, அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியன இந்த ரோட்டில் அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பரபரப்பான ரோடாக இது உள்ளது. எந்நேரமும் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. 'ஸ்மார்ட் ரோடு' என்ற பெயர் இருந்தாலும், துர்நாற்றம் பரப்பும் வகையில் தான் இங்குள்ள கழிவு நீர் வடிகால்கள் உள்ளன. அரசு ஊழியர் குடி யிருப்பு அருகே இந்த கால் வாயில் கழிவு நீர் உடைப் பெடுத்து கடந்த இரு நாட்களாக ரோட்டில் பாய்ந்து செல்கிறது. ரோட்டில் செல்லும் வாகனங்கள் இந்த கழிவு நீரைக் கடந்து செல்லும் அவலம் காணப்பட்டது. இதனால், மாநகராட்சி ஊழியர்கள் இங்கு உடைப்பெடுத்த கழிவு நீரை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
இதற்காக கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நேற்று காலை பணி மேற்கொள்ளப்பட்டது. கழிவு நீர் கால்வாயில் பெருமளவு கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதின் காகிதங்கள் ஆகியனவும் அதிகளவில் மண்ணும் சேர்ந்து பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்காங்கே கால்வாய் மூடிகளைத் திறந்து ஊழியர்கள் அதை அகற்றினர். கால்வாய் அடைப்பு நீக்கும் வாகனங்கள் இந்த அடைப்புகளைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டன.