/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலியுக பிரச்னைகளுக்கு பாகவதமே மாமருந்து
/
கலியுக பிரச்னைகளுக்கு பாகவதமே மாமருந்து
ADDED : ஜூலை 01, 2024 02:05 AM

திருப்பூர்;''கலியுகத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், ஸ்ரீமத் பாகவதமே சரியான மாமருந்து,'' என, ஸ்ரீபாலாஜி பாகவதர் பேசினார்.
ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மகா உற்சவம், திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடந்து வருகிறது. கடந்த, 26ல் துவங்கிய நிகழ்ச்சி, நாளை (2ம் தேதி) நிறைவு பெறுகிறது.
'பிரஹலாதன் சரித்திரம்' என்ற தலைப்பில் ஸ்ரீபாலாஜி பாகவதர் பேசியதாவது:
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள ஒவ்வொரு அத்யாயமும், இறைவனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இருதயத்தில், பக்தியை நிரப்பும் வகையில், பாகவதம் அமைந்துள்ளது. கலியுகத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கு, பாகவதமே சரியான மாமருந்து. இறைவன் மீதான பக்தியை பெருக்குவதே, பாகவதத்தின் சிறப்பு.
பக்தியை பின்பற்றி ஞானம் பெற வேண்டும் என, ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டப்படுகிறது. பாகவதம் செய்ய முடியாவிட்டாலும், அரங்கில் அமர்ந்து கேட்க இயலாவிட்டாலும், அவ்வழியாக செல்லும் போது ஒரு நிமிடம் காதில் கேட்டாலே, இறையருள் கிடைக்கும்.
எவ்வித முயற்சியாலும் இறைவன் நம்மை தேடி வரமாட்டார்; பக்தியால் மட்டுமே வருகிறார். இப்படித்தான் வருவார் என்று கூறமுடியாது; எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இறைவன் வருவார். பக்தரின் உருக்கத்துக்கு இறைவன் இறங்கி வருவான்; உருட்டல், மிரட்டலுக்கு வசப்பட மாட்டார்.
இறுதிகாலத்தில் இறைவனை நினைக்க முடியாத நிலை உருவானாலும், முன்பு செய்த பக்தியின் பயனாய், சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்வான்.
இவ்வாறு, அவர் பேசினார்.