/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் அபாயம்
/
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் அபாயம்
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் அபாயம்
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூலை 30, 2024 01:59 AM
உடுமலை;மின்கம்பங்களில் விதிகளை மீறி, அமைக்கப்படும் விளம்பர பலகைகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மின்வாரியத்தினர் பலகைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட, நகரம், கிராமப்புறங்களில், மின் வினியோகத்துக்காக, பல ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இடைவெளியில், மின்பாதை, மின்கம்பங்கள் பராமரிப்புக்கு, மின்தடை அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், மின்கம்பங்களில், தொங்க விடப்படும், விளம்பர பலகைகள் அகற்றப்படுவதில்லை. உடுமலை பகுதியிலுள்ள, மின்கம்பங்களில், விளம்பர பலகைகள் அமைப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
நகரின் முக்கிய ரோடுகளிலும், கிராமப்புறங்களிலுள்ள, அனைத்து மின்கம்பங்களும் விளம்பர பலகைகள் மாட்ட பயன்படும் ஸ்டாண்டாக மாற்றப்படுகிறது. சென்டர்மீடியனில் உள்ள மின்கம்பங்களும் இதற்கு தப்பவில்லை.
இதனால், சந்திப்பு பகுதியில், வாகன ஓட்டுநர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் திணறுகின்றனர்.
இத்தகைய பலகைகள், கம்பத்தின் மையப்பகுதியில், கட்டப்படுவதால், பழுது நீக்குவதற்காக, மின்கம்பத்தில் ஏற பணியாளர்கள் திணற வேண்டியுள்ளது.
மழைக்காலத்தில், இந்த பலகைககள் மின்விபத்து ஏற்படுத்தும் என தெரிந்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சில இடங்களில், டிரான்ஸ்பார்மரிலும் பலகைகள் கட்டப்படுகின்றன.
பஸ் ஸ்டாப் அருகில், பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள், அவை காற்றில் அசையாமல் இருக்க, அருகிலுள்ள மின்கம்பத்தில், அதை கட்டி வைக்கின்றனர். இதனால், பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், கிராமப்பகுதியில், பல்வேறு ஒயர்களை, மின்கம்பத்தில் கட்டுகின்றனர். இத்தகைய விளம்பர பலகைகளை பாரபட்சமில்லாமல் அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே, மின்வாரிய பணியாளர்களும், பொதுமக்களும், மின்விபத்து அச்சத்திலிருந்து விடுபட முடியும்.