/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் வரப்பு அமைப்பு பசுந்தீவனத்துக்கும் உதவும்
/
உயிர் வரப்பு அமைப்பு பசுந்தீவனத்துக்கும் உதவும்
ADDED : செப் 03, 2024 02:01 AM
உடுமலை;விளைநிலங்களில், பசுந்தீவனத்துக்கான மரங்கள் மற்றும் புல் வகைளை கொண்டு உயிர் வரப்பு அமைப்பதால், பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை பகுதியிலுள்ள, தென்னந்தோப்புகளில், மண் அரிப்பை தவிர்க்கவும், பசுந்தீவன தேவைக்காகவும் உயிர் வரப்பு அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வரப்புகளில், புல்வகைகளான கொளுக்கட்டைப்புல், கினியாப்புல் போன்றவற்றை நட்டு அதன் இரு ஓரத்திலும் சூபாபுல் அல்லது கிளைரிடிசியா போன்ற மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.
இத்தகைய உயிர் வரப்பு முறையில் மண் அரிப்பு தவிர்க்கப்பட்டு, கால்நடைகளுக்கான பசுந்தீவனமும் கிடைக்கிறது.
இதே போல், இப்பகுதி விவசாயிகள், விளைநிலத்தை சுற்றிலும், வாகை, உதியன், பூவரசு, கொடுக்காப்புளி மற்றும் அகத்தி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.
உயிர் வேலியாக அமையும் இம்மரங்கள், கால்நடைகளின் பசுந்தீவன தேவைக்கு பயன்படுகிறது. மேலும், வாழை சாகுபடியில், அதிக காற்றினால், மரங்கள் சாய்வதையும், இலைகள் சேதப்படுத்துவதையும் தவிர்க்கிறது.
தென்னை சாகுபடியில், இரு மரங்களிடையே உள்ள இந்த இடைவெளியில் தீவன குறுமரங்களான, 'சூபாபுல்', பயறு வகை தீவனப்பயிர்களான கலப்பக்கோனியம், முயல்மசால் போன்றவற்றை வளர்க்க, கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்துகிறது.
தென்னை மரத்தின் அடிப்பகுதியை சுற்றி முயல் மசால் பயிர் செய்வதன் வாயிலாக, அவற்றில் உள்ள வேர் முடிச்சுகளுக்கு நைட்ரஜன் சேமிக்கும் சக்தி இருப்பதால் தேங்காய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.