திருப்பரங்குன்றம் தீப வழக்கு: விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
UPDATED : டிச 12, 2025 05:06 PM
ADDED : டிச 12, 2025 11:15 AM

மதுரை:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ( திங்கட்கிழமை) ஐகோர்ட் மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால், 'கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார்.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை
இந்த வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது. போலீஸ் கமிஷனர் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், வாதங்களை முன் வைத்தார்.
ராமன் வாதத்தில், ''இது ஒன்றும் பொது நல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார். பிரிவி கவுன்சில் தீர்ப்பு உட்பட இது தொடர்பான வெவ்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அட்வகேட் ஜெனரல் வாதங்களை முன் வைத்தார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த வாதம்
கோயில் தரப்பு வக்கீல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரைனைட் தூண். நீதிபதிகள்: மலை உச்சியில் இருப்பது கிரைனைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது ?
கோயில் தரப்பு வக்கீல்: பல புகைப்படம் பார்த்து பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்
நீதிபதிகள் : இது சர்வே கல்லா ? தீபத்தூணா ? விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதை கூற முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

