/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு பிரகாசமான எதிர்காலம்! தொழில் வல்லுனர்கள் ஆச்சரியமூட்டும் நம்பிக்கை
/
திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு பிரகாசமான எதிர்காலம்! தொழில் வல்லுனர்கள் ஆச்சரியமூட்டும் நம்பிக்கை
திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு பிரகாசமான எதிர்காலம்! தொழில் வல்லுனர்கள் ஆச்சரியமூட்டும் நம்பிக்கை
திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு பிரகாசமான எதிர்காலம்! தொழில் வல்லுனர்கள் ஆச்சரியமூட்டும் நம்பிக்கை
ADDED : செப் 06, 2024 01:47 AM

திருப்பூர்;உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் திருப்பூர் சாதனை படைத்துள்ளதால், ஏற்றுமதி வர்த்தகத்தில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக, தொழில் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்து வரும், 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, பசுமை சார் உற்பத்தியை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், பார்வையிட்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்க, ஐரோப்பிய வர்த்தக வாய்ப்புகளை தொடர்ந்து பெறவும், புதிய வர்த்தக ஆர்டர்களை ஈர்க்கவும், 2030ம் ஆண்டுக்குள், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி, மறுசுழற்சி சார் ஜவுளி உற்பத்தியை ஆவணமாக்கி, அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு, அனைத்து ஏற்றுமதியாளருக்கும் உள்ளது.
அதற்கேற்ப, இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, ஏற்றுமதியாளர்களின் சாதனைகளை விவரிக்கும் கேந்திரமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, ஏற்றுமதியாளர்கள், கரூர் நிறுவனத்தினர் அமைத்துள்ள ஸ்டால்களில், வர்த்தக பிரதிநிதிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறந்த எதிர்காலம் உண்டு
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுபோல், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் கால்பதிக்க வேண்டும். உலக நாடுகள், பருவநிலை மாற்றத்தை தவிர்க்க, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது விரும்புகின்றனர். அதற்காகவே, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி, பசுமை சார் உற்பத்தி, மறுசுழற்சி உற்பத்தி ஆடைகளை எதிர்பார்க்கின்றனர். அதன்படி, திருப்பூருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
- ரோஹினி சூரி
அகில இந்திய துாதுவர்
சர்வதேச பின்னலாடை கண்காட்சி
---------------------
வர்த்தகம் இருமடங்காகும்
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, அனைத்து நாடுகளும், பூமியை பாதுகாக்க வேண்டுமென விரும்புகின்றன. 'சீனா பிளஸ் 1' என்ற முடிவாலும், வங்கதேசத்தில் நிலவும் குழப்பம் காரணமாகவும், வரும் ஆண்டுகளில் திருப்பூருக்கான வாய்ப்பு, இருமடங்காக உயரும்; அதற்கு நாம் முதலில் தயாராக வேண்டும். பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் மட்டுமே முன்னோடியாக இருக்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி, பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை உற்பத்தியில், ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளது.
- ரோஹித் அனஜா
'நிப்ட் அலுமினி'
அசோசியேஷன் செயலாளர்
---------------------
கூட்டு முயற்சி வெற்றி தரும்
உலக நாடுகளின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகம் என்பது, 70 சதவீதம் செயற்கை நுாலிழை, 30 சதவீதம் பருத்தி என்ற அளவில் இருக்கிறது. நாம், இதுவரை பருத்தி ஆடை வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி வந்தோம். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி, மொத்த வர்த்தகத்தில், 20 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. திருப்பூரின் பருத்தி நுாலிழை பின்னலாடை ஏற்றுமதி, 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இனி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை, வலுவாக கட்டமைக்க முயற்சி எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில், கூட்டு முயற்சியானது வெற்றியை குவிக்கும்.
- சஞ்சய் சுக்லா
'டிரைபெர்க்' குழு தலைவர்