/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் பட்ஜெட்'
/
'நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் பட்ஜெட்'
ADDED : ஜூலை 25, 2024 11:10 PM

திருப்பூர் : மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என, கருத்தரங்கில் ஆடிட்டர் பேசினார்.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, பிரைம் இன்போடெக், ஷெ ன்டேக்ஸ் சார்பில், மத்திய பட்ஜெட் விளக்க கருத்தரங்கம், ஆர்.கே., ரெஸிடென்சியில் நேற்று நடைபெற்றது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமைவகித்தார். ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் ஷினு வி தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஆடிட்டர் அரவிந்த் தங்கம் பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில், அனைத்து வரி செலுத்துவோருக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு, பூஜ்ஜிய சதவீத வரி அதாவது வரி இல்லை என்பது மாற்றமின்றி தொடர்கிறது. 3 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் 5 சதவீத வரி செலுத்தவேண்டியிருந்தது.
இனி, 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரி செலுத்தினால்போதும். இதனால், தனிநபர் செலுத்தும் வருமான வரி குறையும்.
அதேபோல், பங்குதாரர் நிறுவனங்களில், பங்குதாரர் செலுத்தும் வருமான வரியும் வரி குறைகிறது. 53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைப்படி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டு முதல் 2019 - 20 வரையிலான நிதியாண்டுகளில் வரி நிலுவை உள்ளிட்ட நோட்டீஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரை பொருத்தவரை, ரீபண்ட் பெறும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் போது செலுத்திய வரியைவிட, ஏற்றுமதி ஆடையின் வரி குறைவாக இருக்கும்பட்சத்தில், கூடுதலாக உள்ள வரியையும் ரீபண்டாக பெற்றுக்கொள்ளமுடியும். பட்ஜெட்டில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இது, நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.
வரி பயிற்சியாளர்கள் பங்கேற்று, பட்ஜெட் அறிவிப்புகள் சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். பிரைம் இன்போடெக் நிறுவனத்தை சேர்ந்த பிரேம்குமார் நன்றி கூறினார்.

