உடுமலை;உடுமலை கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில், மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை - கொழுமம் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையதாகும். உடுமலையிலிருந்து பழநிக்கு மாற்றுப்பாதையாக இந்த ரோடு உள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும் இந்த ரோட்டில், அகலரயில்பாதை செல்கிறது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நிற்கிறது.
இதனால், நகரப்பகுதியில் நெரிசல் அதிகரிக்கிறது. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.எனவே கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க அரசு பரிந்துரை வழங்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.