/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத மறையூர் ரோட்டில் விலகி போக முடியல!: இரு மாநில வர்த்தகத்திலும் பாதிப்பு
/
பராமரிப்பில்லாத மறையூர் ரோட்டில் விலகி போக முடியல!: இரு மாநில வர்த்தகத்திலும் பாதிப்பு
பராமரிப்பில்லாத மறையூர் ரோட்டில் விலகி போக முடியல!: இரு மாநில வர்த்தகத்திலும் பாதிப்பு
பராமரிப்பில்லாத மறையூர் ரோட்டில் விலகி போக முடியல!: இரு மாநில வர்த்தகத்திலும் பாதிப்பு
ADDED : செப் 17, 2024 04:50 AM

உடுமலை: மூணாறு ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு, எதிரே வரும் வாகனங்களுக்கு விலகிச்செல்ல முடியாத அளவுக்கு ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் உருவாகியுள்ளது; இதனால், வனப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடுமலை - மூணாறு ரோட்டில், சின்னாறு வரை, 28.80 கி.மீ., வரையிலான ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த ரோட்டில், ஒன்பதாறு செக்போஸ்ட் முதல், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதி துவங்குகிறது.
கேரளா மூணாறு, மறையூர், காந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் உடுமலைக்கும், இங்கிருந்து அதிகளவு சுற்றுலா மற்றும் காய்கறி ஏற்றிச்செல்லும் வாகனங்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.
இரு மாநில போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கும் இந்த ரோடு நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் ரோட்டின் இருபுறமும் உள்ள மலைத்தொடர்களில் இருந்து வரும் மழை நீர், ரோட்டை சேதப்படுத்துகிறது.
குறிப்பாக சரிவான பகுதிகளில், ரோட்டையொட்டி அதிகளவு மண் அரித்து செல்லப்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனுாத்து பிரிவு முதல் கொண்டை ஊசி வளைவு வரை என, சுமார், 6 கி.மீ., க்கும் அதிகமான பகுதியில், ரோட்டோர மண் அரிப்பு அதிகளவு உள்ளது.
இதனால், அப்பகுதிகளில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில், ரோட்டோரத்தில் வாகனங்களை இறக்க முடியாது.
அதிக பள்ளமாக இருப்பதால், ஏதாவது ஒரு வாகனம், ரிவர்சில் சென்று இடம் கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாகனங்கள் அப்பகுதியை கடக்க முடியும். இந்த பிரச்னையால், வனப்பகுதியிலுள்ள ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் இடத்தில், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சின்னாறு செக்போஸ்ட் வரை, செல்லவே சிரமப்பட வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, ரோட்டோரத்தில், 'பேவர் பிளாக்' அல்லது கான்கிரீட் தரை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக இரு மாநில வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த ரோட்டின், 18 வது கி.மீ., ல், சின்னாறு அருகே, கொண்டை ஊசி வளைவு அமைந்துள்ளது.
வளைவில் விபத்துகளை தவிர்க்க அமைக்கப்பட்ட தடுப்புகள் சரிந்துள்ளது. இந்த தடுப்புகளையும் சீரமைக்க வேண்டும்.