sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை துறை 'புதிய அவதாரம்' மாற்றமே ஏணி; ஏற்றமே இனி! துடிப்புடன் களமிறங்கிய 'இளம் படை'

/

பின்னலாடை துறை 'புதிய அவதாரம்' மாற்றமே ஏணி; ஏற்றமே இனி! துடிப்புடன் களமிறங்கிய 'இளம் படை'

பின்னலாடை துறை 'புதிய அவதாரம்' மாற்றமே ஏணி; ஏற்றமே இனி! துடிப்புடன் களமிறங்கிய 'இளம் படை'

பின்னலாடை துறை 'புதிய அவதாரம்' மாற்றமே ஏணி; ஏற்றமே இனி! துடிப்புடன் களமிறங்கிய 'இளம் படை'


UPDATED : செப் 09, 2024 02:40 AM

ADDED : செப் 09, 2024 01:48 AM

Google News

UPDATED : செப் 09, 2024 02:40 AM ADDED : செப் 09, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரே கூரையின் கீழ், அனைத்து விதமான புதிய தொழில்நுட்பம் காட்சிப்படுத்துவது சிறப்பு. ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் என ஒரே இடத்தில் பேசி, வர்த்தகத்தை வளர்க்க, கண்காட்சிகள் வழிகாட்டு கின்றன. திருப்பூரில், 3,000க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் இருந்தாலும், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து, மற்ற நிறுவனத்துக்கு தெரியாது.

புதிய வர்த்தகர்களை சந்திப்பதை போல், கண்காட்சியில் பங்கேற்கும் இதர நிறுவனங்களின் தயாரிப்பு வழிமுறைகளையும், சிறப்புகளையும் கூட நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. கண்காட்சி வாயிலாக, புதிய வர்த்தகர், வர்த்தகம் கிடைப்பது உறுதியாகிறது; புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. மாறுபட்ட தொழில்நுட்ப பகிர்வும் கிடைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகத்தில் லாபம் குறைந்துள்ளது. ஆர்டர்களும் குறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்தினால் மட்டுமே, தொழில் வாய்ப்புகளை தக்க வைக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அபரிமிதமாக பருத்தி விலை உயர்ந்த பிறகுதான், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும் என்ற எண்ணமே பிறந்தது. பருத்தி நுாலிழை ஆடைக்கான வாய்ப்பு நிச்சயம் அப்படியேதான் இருக்கும்; இருப்பினும், செயற்கை நுாலிழை ஆடை வர்த் தகத்தில் களமிறங்கினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாற முடியும்.

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி துவங்கி, 35 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகள் இடைவெளியில், தொழில்துறையினர் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்கின்றனர் எனலாம். புதிய சவால்கள் எழுவதும், அதை முறியடித்து சாதனையாக கோலோச்சுவதும், பின்னலாடை ஏற்றுமதி வரலாற்றில், பலமுறை பதிவாகியுள்ளது.

இன்றைய உலகம், புதிய பாதையில் பயணிக்க துவங்கிவிட்டதால், பின்னலாடை தொழிலும், புதிய அவதாரம் எடுக்க ஆயத்தமாகிறது. அதிநவீனத் தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. சர்வதேசப்போட்டிகளைச் சமாளிக்க, பிற நாடுகளை காட்டிலும் குறைவான விலையில் தரம் மிக்க ஆடைகளைத் தயாரித்து வழங்க வேண்டியது கட்டாயம். உற்பத்திச்செலவைக் குறைப்பதில் இருந்து தொழில்துறையினருக்கான சவால் துவங்கிவிடுகிறது. பின்னலாடை தொழிலுக்குத் தற்போது முதுகெலும்பாக இளம் ஏற்றுமதியாளர்கள் உருவாகிவருகின்றனர்.

இளம் தலைமுறையினரில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினராக களம் காணும் தொழில்முனைவோர், தங்கள் நிறுவனத்தை மாறுபட்ட கோணத்தில், வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல, பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளனர்.

திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக திருப்பூரில் நடத்தப்படும் சர்வதேச கண்காட்சிகள் அமைகின்றன. இவற்றைச் சரிவர பயன்படுத்தினாலே, திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி சாதனைகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்தலாம்; நமக்கான வர்த்தக வாய்ப்புகளை குவிக்கலாம் என்பதில், இளம் தலைமுறையினர் உறுதியாக இருக்கின்றனர்.

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது மட்டுமல்ல; 'மாற்றத்தில் இருந்தே ஏற்றம் துவங்குகிறது' என்பதை உணர்ந்தே, இளம் தலைமுறையினர் துடிப்பாக களமிறங்கியுள்ளனர்.

செயற்கை நுாலிழை ஆடை

காலத்தின் கட்டாயம்

(1) கார்த்திக் பிரபு, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனச் செயல் இயக்குனர்:

சுற்றுச்சூழல் பாதிப்பில்லா ஆடை உற்பத்தி என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பார்வையிட்ட, வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் முகமைகள், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி, மறுசுழற்சி, பசுமை திறன் உற்பத்தியை பார்த்தும் கேட்டும் வியந்தனர். எங்கள் நிறுவன அரங்கு, சிறப்பான ஸ்டால் என்ற பரிசை பெற்றது. எதிர்காலமே, பசுமை சார் உற்பத்தி - வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை நம்பித்தான் இருக்கிறது. பின்னலாடை தொழிலின் தலைநகரான திருப்பூர், தற்போதே தயாராகிவிட்டது. செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் பயணிக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

பின்னலாடை நகர் சாதனைகள்

காட்சிப்படுத்துதல் அவசியம்

2. சரண்ராஜ், துணைத்தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர் துணைக்குழு:

சர்வதேச பின்னலாடைக் கண்காட்சியில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை வலியுறுத்தி, 'ஸ்டால்' அமைக்கப்பட்டது. குறிப்பாக, மறுசுழற்சி தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதுவரை திருப்பூர் செய்து வரும் சாதனைகளை, இனி ஆவணமாக்கி, காட்சிப்படுத்த வேண்டும்; அப்போதுதான், ஐரோப்பிய வர்த்தகர் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்தியா என்றாலே, பருத்தி ஆடை என்ற பெயர் இருக்கிறது.

அத்துடன், செயற்கை நுாலிழை ஆடைகளையும் நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்றுமதியில் அதிகபட்ச வாய்ப்பு இருப்பதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு நாம் மாறியாக வேண்டும்; அதற்கான முயற்சிகளையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் எடுத்து வருகிறது. இதுவரை வரை நடந்த கண்காட்சிகளை காட்டிலும், 51வது கண்காட்சி திருப்புமுனையாக இருந்தது.

'சீனா பிளஸ் 1' போல்

'வங்கதேசம் பிளஸ் 1'

(3) சுகேஷ்குமார், நிர்வாக இயக்குனர், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம்:

'சஸ்டெய்னபிலிட்டி' மற்றும் 'சர்குலாரிட்டி' என்பதை உலகம் முழுவதும் உற்றுநோக்குகின்றன. வாங்கும் பொருள், எவ்வளவு 'கார்பன் நியூட்ரல்' என்பதை அறியும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி, பசுமை சார் உற்பத்தி, ஜீரோ டிஸ்சார்ஜ் போன்ற சாதனைகளை, நாம் காட்சிப்படுத்தி, பிரபலம் செய்ய வேண்டும்.

கண்காட்சிகள் நடக்கும் போது, 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தால், உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், மாற்றாக மற்றொரு நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமென, வர்த்தகர் முடிவு செய்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு 'சீனா பிளஸ் 1' என்று முடிவு செய்ததுபோல், வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகள், 'வங்கதேசம் பிளஸ் 1' என்ற முடிவை எடுத்துள்ளன.

இந்தியாவில், வலுவான கட்டமைப்பு இருப்பதால், நமக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். வளர்ந்த நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும் நமது நாட்டுடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றன. அதற்கான வாய்ப்புகளை, ஐ.கே.எப்., போன்ற கண்காட்சிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றன; நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மறுசுழற்சி நுாலிழைகள்

உலகம் முழுக்க வரவேற்பு

(4) கவின், நுாலிழை உற்பத்தியாளர், வர்த்தகர்:கொரோனா காலத்தில், முககவசம், முழு உடல் கவசம் தயாரித்து, தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தோம். உலகம், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுசுழற்சி நுாலிழைகளுக்கு உலக மார்க்கெட்டில் அதிக வரவேற்பு இருக்கிறது. நுாலிழை வர்த்தகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக, புதிய 'பிராண்ட்' உருவாக்குவதற்கான, ஆராய்ச்சியை துவக்கியிருக்கிறோம். திருப்பூரில் நடத்தப்படும் கண்காட்சிகள்தான், தொழிலுக்கு வழிகாட்டுகின்றன. பின்னலாடைத் துறை தவிர, வேறு துறைகளிலும் கால்பதிக்க விழைகிறோம். 'பல்ஸ்' என்ற இசை நிகழ்ச்சியை, துபாயில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

அதிநவீன இயந்திரங்கள்

அதிகம் தேவைப்படுகின்றன

(5) ராஜ்குமார், காம்பாக்டிங் மற்றும் ரைசிங் நிறுவன உரிமையாளர்:

'ரைசிங்' மற்றும் காம்பாக்டிங்' மெஷின்கள், தொழிலாளர்களை கொண்டே இயக்கப்படுகின்றன. இவற்றில், 'ஆட்டோமேஷன்' இருப்பது சிறப்பாக இருக்கும். தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால், அதிநவீன இயந்திரங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றன. உற்பத்தி பிரிவில், செலவுகளை குறைப்பது மட்டுமே வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். திருப்பூரில் நடத்தப்படும் கண்காட்சிகள், எதிர்காலத்துக்கு வழிகாட்டுகின்றன. வரப்போகும் தொழில்நுட்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து, முன்கூட்டியே தெரிவிக்கின்றன. நாம் தனியே தேடி கண்டறிய முடியாது. கண்காட்சியில், ஒரே இடத்தில், பல்வகை விவரங்களை அறிய முடிகிறது. கண்காட்சியில், நிகழ்காலம் மட்டுமல்ல... எதிர்கால வளர்ச்சிக்கும் வழிகாட்டுதல் கிடைக்கிறது; சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வர்த்தகர் விரும்பும் வண்ணம்

ஆடைகளில் ஒளிரும் இன்னும்

(6) அருண்பாலாஜி, பிரின்டிங் நிறுவன உரிமையாளர்:

பிரின்டிங் துறை வெளியே இருந்து பார்த்தால், கஷ்டமாக தெரிந்தது; உள்ளே வந்த பிறகு, எளிதாகிவிட்டது. 'டிஜிட்டல்' பிரின்டிங் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புதிய வளர்ச்சியை கொடுக்கும். ரசாயனம், இங்க் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 10 கலர்களில் மட்டும் 'பிரின்ட்' செய்கிறோம். இனிவரும் நாட்களில், வர்த்தகர் விரும்பும் வண்ணம், அதிகபட்ச கலர்களில் பிரின்ட் செய்ய முடியும். திருப்பூரில் நடத்தப்படும் கண்காட்சிகள் வாயிலாக, பல்வகை புதிய மெஷின்களை, ஒரே இடத்தில் பார்த்து, விசாரித்து, இயக்கி பார்க்கவும் முடிகிறது; வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

நம்மைத் தேடி வருவது சிறப்பு

7.முகில் திருமூர்த்தி, பிரின்டிங் நிறுவன உரிமையாளர்:ஆயத்த ஆடை வர்த்தகத்தில், வங்கதேசம் நமக்கு போட்டியாக இருந்தாலும், நம்மை போல் உயர்தரத்துடன் ஆடை வடிவைமப்பு செய்வதில்லை. பிரின்டிங் தொழில்நுட்பம் என்பது, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு மிக மிக அவசியம். வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து, திருப்பூரில் நடத்தப்படும் கண்காட்சிகளால், புதிய தொழில்நுட்பத்தை நாம் அறிய முடிகிறது; உள்ளூரிலேயே காணக்கிடைக்கிறது. கண்காட்சியை பார்க்க, வெளிநாடுகளுக்கு சென்ற நிலைமாறி, வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மை தேடி வருவது சிறப்பானது.

தொழில் மேம்பாட்டுக்கு

காரணமான கண்காட்சிகள்

8) அருண், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்:

சர்வதேச ஜவுளி சந்தைகளில் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க, புதிய பசுமை சார் உற்பத்தி ஆலைகள் துவங்க வேண்டும்; திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர், நவீன இயந்திரங்களும் அவசியம். ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் மிகமிக அவசியம்.

'நிட்ேஷா', 'நிட்-டெக்', ஐ.கே.எப்., போன்ற கண்காட்சிகள் வாயிலாக, புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த மெஷின்கள் கிடைக்கின்றன. புதிய ஆடை உற்பத்தி தொழில்நுட்பமும் எளிதாக கிடைக்கிறது. ஒரே இடத்தில், பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான அனைத்து சேவைகளும் கிடைப்பது சிறப்பு வாய்ந்தது. உற்பத்தியாளர், டீலர்களுடன் நேருக்கு நேர் பேசி, மெஷின்களின் சிறப்பை அறிய முடிகிறது. பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு, திருப்பூரில் நடந்த கண்காட்சிகளே முக்கிய காரணம். கண்காட்சி நமக்கு சம்பந்தமில்லை என்று இருந்துவிடக்கூடாது; கட்டாயம் பார்வையிட்டு, புதிய அறிமுகங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரே கூரையின் கீழ்

அனைத்து சேவைகள்

(9) சக்திவேல், செயற்குழு உறுப்பினர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:

ஐ.கே.எப்., கண்காட்சியில், 'டி-சர்ட்' களைக் காட்சிப்படுத்தியிருந்தோம். நடந்து முடிந்த, 51வது கண்காட்சியில், எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வர்த்தகர்கள், ஏஜன்ட்கள் நேரில் விசாரித்தனர். ஆண்களுக்கான, சிறப்பு 'ஜக்கார்டு' ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தோம்.திருப்பூரிலேயே கண்காட்சி நடத்துவதால், ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகளையும் பெறமுடிகிறது. கண்காட்சியில் ஸ்டால் அமைப்பவர்களே, மற்ற ஸ்டால்களை பார்த்து, புதிய தொழில்நுட்பத்தை அறிய முடியும். மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடைகள் அதிகம் காட்சிப்படுத்தியிருந்தன.

சீனாவில் இருந்து, பேப்ரிக் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஸ்டால் அமைத்திருந்தது, ஏற்றுமதியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடை உற்பத்தியை, அதிகம் பார்க்க முடிந்தது.

தொழில் வாய்ப்புகள்

தக்க வைக்க வேண்டும்

(10) நிதின் சிவராம், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்:

ஒரே கூரையின் கீழ், அனைத்து விதமான புதிய தொழில்நுட்பம் காட்சிப்படுத்துவது சிறப்பு. ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் என ஒரே இடத்தில் பேசி, வர்த்தகத்தை வளர்க்க, கண்காட்சிகள் வழிகாட்டுகின்றன. திருப்பூரில், 3,000க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் இருந்தாலும், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து, மற்ற நிறுவனத்துக்கு தெரியாது. புதிய வர்த்தகர்களை சந்திப்பதை போல், கண்காட்சியில் பங்கேற்கும் இதர நிறுவனங்களின் தயாரிப்பு வழிமுறைகளையும், சிறப்புகளையும் கூட நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. கண்காட்சி வாயிலாக, புதிய வர்த்தகர், வர்த்தகம் கிடைப்பது உறுதியாகிறது; புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. மாறுபட்ட தொழில்நுட்ப பகிர்வும் கிடைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகத்தில் லாபம் குறைந்துள்ளது. ஆர்டர்களும் குறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்தினால் மட்டுமே, தொழில் வாய்ப்புகளை தக்க வைக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அபரிமிதமாக பருத்தி விலை உயர்ந்த பிறகுதான், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும் என்ற எண்ணமே பிறந்தது. பருத்தி நுாலிழை ஆடைக்கான வாய்ப்பு நிச்சயம் அப்படியேதான் இருக்கும்; இருப்பினும், செயற்கை நுாலிழை ஆடை வர்த்தகத்தில் களமிறங்கினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாற முடியும்.






      Dinamalar
      Follow us