/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் ஆண்டவன் சேவையுடன் அறப்பணி
/
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் ஆண்டவன் சேவையுடன் அறப்பணி
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் ஆண்டவன் சேவையுடன் அறப்பணி
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் ஆண்டவன் சேவையுடன் அறப்பணி
ADDED : ஆக 16, 2024 12:18 AM

ஆண்டவன் அருளை பெற வேண்டுமெனில், அருளுடைய தெய்வங்களை அடிபணிந்து வணங்கினால் போதும். அன்னதானம், மருத்துவ முகாம், ரத்ததானம் என, இயன்ற அளவு அறப்பணியை செய்தாலும், ஆண்டவன் ஆனந்தம் பொங்க அருள்மழை பொழிவான் என்பதை, பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் கமிட்டி நித்தமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியின், 43வது வார்டுக்கு உட்பட்டது பூச்சக்காடு. அங்கு, 100 ஆண்டுகளுக்கு மேலாக, செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம், ஸ்ரீசண்முகா அறுபடை யாத்திரை குழு, பழநி தைப்பூச குழு, கோவில் கமிட்டி என்ற பெயர்களில், அங்குள்ள பக்தர்கள் ஒன்றுபட்டு நின்று, ஓராயிரம் அறப்பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதன் பயனாக, ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், பல்வேறு தெய்வங்களுக்கும் சன்னதிகள் எழுப்பி, நித்ய வழிபாடு நடக்கிறது. வில்வ மரத்தடியில் இருந்து கோவிலில், ஸ்ரீமீனாட்சி - சுந்தரேஸ்வரர், செல்வவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், விஷ்ணு, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரஹ மண்டபம், ஐயப்ப சுவாமி என, நாடி வரும் பக்தர்களுக்கு, அங்குள்ள தெய்வங்கள் அருள்மழை பொழிந்து காத்து நிற்கின்றன.
நாற்பது ஆண்டுகளாக அறுபடை வீடுகளுக்கு யாத்திரை, 35 ஆண்டுகளாக பழநி பாதயாத்திரை, கடந்த, 15 ஆண்டுகளக, கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் விழா நடக்கிறது. விழாவில், 250 பேர் காப்புக்கட்டி விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின், 43வது வார்டுக்கு உட்பட்ட கருவம்பாளையம் பழக்குடோன் அருகே கோவில் அமைந்துள்ளது. சபரிமலை பக்தர்களும், இங்கு இருமடி கட்டி புனித பயணத்தை துவங்குகின்றனர். இங்குள்ள தெய்வங்களுக்கு, தினமும் காலை, 6:30 மணி, மாலை, 5:30 மணி என, இருவேளை பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில், வாராந்திர ராகுகால துர்க்கா பூஜை; வெள்ளிக்கிழமை, திரிசதி பூஜை, திருமண தடை நீக்கும் வகையில், ஜாதகத்தை வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அத்துடன், பைரவர் அஷ்டமி பூஜை, கிருத்திகை மற்றும் சஷ்டி, பிரதோஷ பூஜைகள் நடக்கின்றன.
பவுர்ணமி நாளில், மீனாட்சி அம்மன் வழிபாடும், அமாவாசை வழிபாடும் விமரிசையாக நடந்து வருகிறது. ஜூலை மாதம், கும்பாபிேஷக ஆண்டு விழா பூஜைகள் அமர்க்களமாக நடக்கின்றன. மார்கழி மாதத்தின், 30 நாட்களும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகளும் நடக்கின்றன. அம்மனுக்கு, 108 சீர்வரிசை தட்டுகளை எடுத்துவந்து, ஆடிப்பூரத்தில், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
சித்திரைக்கனி, பங்குனி யுகாதி, உத்திர நாட்களில், அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
அறக்கட்டளையின்அறப்பணி அபாரம்
தம்பி நண்பர்கள் அறக்கட்டளை, கோவில் கமிட்டி சார்பில், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம், கால் அளவீடு செய்யும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. அத்துடன், சுகர் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்; திங்கள்கிழமை மாலை, 6:30 மணிக்கு, 'நியூரோ தெரபி' முகாம் நடக்கிறது.
ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவில், ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது; கடந்த சுதந்திர விழாவில், 75 நபர்கள் ரத்ததானம் செய்தனர். கொரோனா காலத்தில், தினமும், 500 லிட்டர் கபசுர கஷாயம் வினியோகிக்கப்பட்டது. குமரன் கல்லுாரி வளாத்தில் கொரோனா மையத்துக்கு சுண்டல், முட்டை ஆகியவையும், கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.
இறைவழிபாடு என்பது இறைவனின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகும் மார்க்கம். அத்துடன், பொதுசேவையும் இறையருளை பெறும் மற்றொரு மார்க்கம் என்பதை உணர்ந்து, இறைபணியுடன், மக்கள் பணிகளையும் இக்கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர். ஒரே இடத்தில், சகல தெய்வங்களையும் வணங்கி, பேரருளை பெற்று வாழ, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலுக்கு சென்று வரலாமே...!

