/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்பணை கட்டுமானத்தை ஆய்வு செய்யணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
/
தடுப்பணை கட்டுமானத்தை ஆய்வு செய்யணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
தடுப்பணை கட்டுமானத்தை ஆய்வு செய்யணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
தடுப்பணை கட்டுமானத்தை ஆய்வு செய்யணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2024 11:37 PM
உடுமலை:உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் தரம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து, நிலுவையிலுள்ள பணிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், முக்கிய நீராதாரமாக உப்பாறு ஓடை உள்ளது. கோவை மாவட்டத்தில் உருவாகும் மழை நீர் ஓடைகள் ஒருங்கிணைந்து, உப்பாறு ஓடையாக மாறி, அரசூர், பெரியபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு செல்கிறது.
இந்த ஓடையுடன், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் அமைந்துள்ள மழை நீர் ஓடைகளும் இணைகின்றன. மழைப்பொழிவு குறைவான ஒன்றியத்தில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, கடந்த, 2021ல், இருந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
சுமார், 25 கி.மீ., தொலைவுக்குள், 15க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில், பணிகள் முறையாக நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: உப்பாறு ஓடையின் குறுக்கே தரமில்லாமல், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பெயரளவுக்கு, குறுக்குச்சுவர் மட்டும் கட்டியுள்ளனர்; அவையும் பயன்பாட்டுக்கு வரும் முன்பே இடியும் நிலையில் உள்ளது.
சில இடங்களில், தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. நிதி ஒதுக்கப்பட்டும் பல இடங்களில், தடுப்பணைகள் கட்டப்படாமல் உள்ளது. இது குறித்து குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மொத்த தடுப்பணைகள்; நிதி ஒதுக்கீடு விபரம் குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. எனவே, கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளின் தரம்; நிலுவையிலுள்ள பணிகள் குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.