/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சென்னைக்கு தேவை கூடுதல் ரயில்: பயணியர் எதிர்பார்ப்பு
/
சென்னைக்கு தேவை கூடுதல் ரயில்: பயணியர் எதிர்பார்ப்பு
சென்னைக்கு தேவை கூடுதல் ரயில்: பயணியர் எதிர்பார்ப்பு
சென்னைக்கு தேவை கூடுதல் ரயில்: பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 23, 2024 01:01 AM

உடுமலை;வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், உடுமலை வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கப்படாததால், நெரிசலில் தவிப்பதாக ரயில் பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, இந்த வழித்தடத்தில், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ரயில் சேவை அதிகப்படுத்தப்படாமல் உள்ளது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு தற்போது, பாலக்காடு - பொள்ளாச்சி - உடுமலை வழியாக சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது.
உடுமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. எனவே, வார விடுமுறை நாட்களில், சென்னை செல்ல, ரயில் சேவையை அதிகளவு பயணியர் தேர்வு செய்கின்றனர்.
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள, தொழிற்சாலைகளிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்கள், வார விடுமுறை முடிந்து, திரும்பிச்செல்ல இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர்.
வாரம்தோறும், நுாற்றுக்கணக்கான பயணியர், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்கின்றனர். இந்நிலையில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்தளவே இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பயணியர் முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏற வேண்டியுள்ளது; குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அகல ரயில்பாதையில் சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில், தென்னக ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
பண்டிகை காலங்களில், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே,கூடுதல் ரயில் சென்னைக்கு இயக்கினால், ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்; ஆயிரக்கணக்கான பயணியரும் பயன்பெறுவார்கள்.