/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்
/
அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்
ADDED : ஏப் 27, 2024 11:35 PM

அரசு வேலைக்கு இன்றைய இளைஞர்கள் பலர் ஆசைப்படுகின்றனர். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், போட்டி தேர்வில் சாதித்து உயர் அரசுப்பதவிகளையும் இளம் வயதிலேயே பெற முடியும். இதற்கு, திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்கள் சாட்சியாக இருக்கின்றனர்.
விவசாயி மகள்
ஏற்கனவே, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்து சுபாஷினி, குரூப் 1 தேர்வெழுதி, கூட்டுறவு துறையில் துணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.
''போட்டி தேர்வை எதிர்கொள்வதென்பது, சவாலான பணியல்ல; நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் தான்; பெற்றோர் விவசாயம் தான் பார்க்கின்றனர். நான் படிக்கவும், போட்டி தேர்வுக்கு தயாராகவும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். ஓராண்டு, கஷ்டப்பட்டு படித்தேன்; அரசுப்பணி சாத்தியமானது,'' என வெற்றியின் ரகசியம் சொன்னார் சுபாஷினி.
நம்பிக்கையே துணை
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வேளாண்மை அலுவலராக பணியாற்றி வரும் நித்யா 26, குரூப் 1 தேர்வெழுதி, சப்-கலெக்டராக பொறுப்பேற்க இருக்கிறார். ''கல்லுாரி படிக்கும் போதே அரசுப்பணி மீது ஆர்வம் இருந்தது; அப்போதில் இருந்தே போட்டி தேர்வுக்கு தயாராக துவங்கினேன்; ஒரு முறை தோற்றாலும், அடுத்த முறை வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்; போட்டி தேர்வு எளிதாகும். குடும்ப சூழலும் நம் முயற்சிக்கு சாதகமாக அமைய வேண்டும். ஒருமுறை போட்டி தேர்வை எதிர்கொண்டாலே தைரியம் வந்துவிடும்'' என நம்பிக்கை தருகிறார், நித்யா.
உழைப்பே உயர்வு
திருப்பூரில் பல் டாக்டராக பணியாற்றி வந்த தாரணி, 4 ஆண்டாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, 4 முறை தேர்வெழுதி, நான்காவது முறை, தேர்ச்சி பெற்றிருக்கிறார். ''அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும்; அரசுப்பணி பெறுவதும் கடின உழைப்பின் வழியாக கிடைப்பது தான்; சில மாத கடின உழைப்பு; ஆயுள் முழுக்க நிம்மதி என்ற நம்பிக்கை வந்தாலே போதும்; அதற்கான முயற்சிக்கு உத்வேகம் கிடைக்கும்,'' என்றார் தாரணி.
பயிற்சியே பிரதானம்
உடுமலையை சேர்ந்த இந்திராபிரியதர்ஷினி, வேளாண்மை அலுவலராக பணிபுரிந்த நிலையில், குரூப் 1 தேர்வெழுதி, வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். ''போட்டி தேர்வுக்கு முழு ஈடுபாடுடன் தயாராக வேண்டும்; நிறைய பயிற்சி செய்ய வேண்டும்; வெற்றி கிடைக்கும்,'' என, ஒரே வரியில் தன்னம்பிக்கை தருகிறார்.--
18-ம் தேதி ரெகுலர் 11ம் பக்கம்
தாரணி
-----
26ம் தேதி 3ம் பக்க படங்கள்
நித்யா, சுபாஷினி, இந்திரா பிரியதர்ஷினி

