/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழகத்தில் தேங்காய் சீசன் துவங்கியது! கொப்பரை கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை
/
தமிழகத்தில் தேங்காய் சீசன் துவங்கியது! கொப்பரை கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை
தமிழகத்தில் தேங்காய் சீசன் துவங்கியது! கொப்பரை கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை
தமிழகத்தில் தேங்காய் சீசன் துவங்கியது! கொப்பரை கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை
ADDED : மார் 02, 2025 11:47 PM

திருப்பூர்,; தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வந்தனர். மேலும், வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
தற்போது, கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்தாலும், உற்பத்தி பாதித்துள்ளதால், விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேங்காய் சீசன் துவங்கியுள்ளது. நடப்பாண்டு, 60 சதவீதம் உற்பத்தி மட்டுமே இருக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
கேரளாவில், ஜன., பிப்., மார்ச் போன்ற மாதங்களும்; தமிழகத்தில், மார்ச், ஏப்., மே போன்ற மாதங்களும்; கர்நாடகாவில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களும் தேங்காய் சீசனாக உள்ளது. இந்த மாதங்களில்,தேங்காய் மற்றும் கொப்பரை அதிகளவு மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
கேரளா வேர் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற காரணங்களினால், உற்பத்தி குறைந்து, 60 சதவீதம் மட்டுமே வரத்து இருக்கும். சீசன் துவங்கும் நேரத்தில், கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ சாதாரண கொப்பரை, 143 ரூபாய்; ஸ்பெஷல், 145 ரூபாய் விலை கிடைக்கிறது.
முதிர்ந்த கருப்பு தேங்காய், ஒரு டன், 63 ஆயிரம் ரூபாய், பச்சை தேங்காய், 59 ஆயிரம் ரூபாயாக உள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஒரு டின் தேங்காய் எண்ணெய், 3,170 ரூபாய், ஒரு கிலோ தேங்காய் பவுடர், 240 ரூபாயாக உள்ளது.
ஒரு டன் தேங்காய் தொட்டி, 21 ஆயிரம் ரூபாய், ஆயிரம் பச்சை மட்டை 2,800 முதல், மூவாயிரம் ரூபாய்க்கும், கருப்பு மட்டை இரண்டாயிரம் முதல், 2,200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
இந்நிலையில், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைக்க துவங்கி விட்டனர். கடந்தாண்டு, ஆதார விலை கொப்பரை கொள்முதல் நிலையம் துவங்க தாமதமானதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நடப்பாண்டு அதுபோன்ற சூழலை தவிர்க்க, ஏப்., மாதத்தில் கொப்பரை கொள்முதலை துவங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, தேங்காய், கொப்பரை மார்க்கெட் சரிய வாய்ப்பு இல்லை. தேங்காய் உற்பத்தியும் குறைந்துள்ளதால், விலை உயர மட்டுமே வாய்ப்புள்ளது. இந்நிலையில், கொள்முதல் மையத்தை துவங்கினால், விவசாயிகள் பயன்பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.