/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிர்ந்த வானிலை கோமாரிக்கு வாய்ப்பு
/
குளிர்ந்த வானிலை கோமாரிக்கு வாய்ப்பு
ADDED : ஆக 20, 2024 10:20 PM
உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், தற்போது நிலவி வரும் வானிலையால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், பரிசோதனை செய்ய, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை வேளாண் பல்கலை., யின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், தற்போது நிலவும் வானிலை அடிப்படையில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆடிப்பட்டத்துக்கான மக்காச்சோளத்தை இறவையில் விதைக்க உகந்த காலமாகும். கரும்பில் எதிரெதிர் வரிசைகளை விட்டம் கட்டி காற்றினால், சாயாமல் பாதுகாக்கலாம். கரிசல் மண்ணில் சாகுபடி செய்யப்பட்ட பின்பட்ட கரும்பில், இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது.
இதை நிவர்த்தி செய்ய, 15 நாட்களுக்கு ஒரு முறை அன்னபேதி உப்பையும், யூரியாவையும், தலா ஒரு சதவீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தக்காளியில், மண்ணின் வாயிலாக பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த, 'ட்ரைக்கோடெர்மா விரிடி' உயிர் பூஞ்சாண கொல்லியை ஒரு ெஹக்டேருக்கு 2.5 என்ற அளவில் போதுமான தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
நிலவும் வானிலை, கோமாரி நோய் ஏற்பட சாதகமாக உள்ளதால், கறவை மற்றும் உழவு மாடுகளில் வாய் மற்றும் கால்களை பரிசோதனை செய்ய வேண்டும். பால் கறக்கும் முன்பும், பின்பும், 1 சதவீத 'பொட்டாசியம் பர்மாங்கனேட்' கரைசலை கொண்டு கழுவ வேண்டும்.
தட்டை புழுக்களின் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க, ஏரி மற்றும் குளத்தின் அருகிலுள்ள புற்களை கால்நடைகள் மேயாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அறிவுறுத்தியுள்ளனர்.

