/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலேஜ் ரோடு சீரமைப்பு ; வாகன ஓட்டிகள் நிம்மதி
/
காலேஜ் ரோடு சீரமைப்பு ; வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : மே 11, 2024 12:23 AM

திருப்பூர்;காலேஜ் ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், புஷ்பா சந்திப்பு பகுதியிலிருந்து வஞ்சிபாளையம் செல்லும் காலேஜ் ரோட்டில், சிக்கண்ணா கல்லுாரி, தனியார் பள்ளிகள், அய்யப்பன் கோவில், கொங்கணகிரி கோவில் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது.
இந்த ரோட்டில், 4வது குடிநீர்திட்ட பிரதான குழாய் பதிக்கும் பணி, இரண்டாண்டு காலமாக நடந்தது. ஒரு வழியாக பணி முடிந்து ரோடுகள் நீண்ட போராட்டத்துக்குப் பின் சீரமைக்கப்பட்டது. அதன்பின் பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு குழி தோண்டி பாதியளவு ரோடு பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது.
இந்நிலையில், அரசு விழாவுக்காக அமைச்சர் உதயநிதி திருப்பூர் வந்த போது, அவசர அவசரமாக ஒரே நாளில் ரோடு சீரமைக்கப்பட்டது. அதன் பின் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகள் அமைந்துள்ள இடங்களில் மூடி அமைக்கும் பணிக்கு பல்வேறு இடங்களில் இந்த ரோடு தோண்டி எடுக்கப்பட்டது.
ஆள் இறங்கு குழிகளுக்கு மூடி அமைத்து அதைச் சுற்றிலும் உயர்ந்த இடம் சரி செய்யும் விதமாக சமன் செய்யப்பட்டது. அதில், தற்போது தார் ரோடு அமைத்து சீரமைப்பு செய்யப்பட்டது.
இதனால், வாகனங்கள் அச்சமின்றியும், நெருக்கடியின்றியும் கடந்து செல்கின்றனர்.