/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு தேவை! எச்சரிக்கும் மருத்துவர்கள்
/
பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு தேவை! எச்சரிக்கும் மருத்துவர்கள்
பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு தேவை! எச்சரிக்கும் மருத்துவர்கள்
பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு தேவை! எச்சரிக்கும் மருத்துவர்கள்
ADDED : மார் 13, 2025 06:53 AM

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெருங்குடல்புற்றுநோய்க்கு ஆரம்ப கட்ட சிகிச்சை முறைகள் உள்ளது. முன்கூட்டியே பரிசோதிப்பதன் மூலம் தொடர்ச்சியான ஆபத்தை தடுக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 40 வயது தாண்டிய ஆண்களுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படுகிறது. பெருங்குடலில் உருவாகும் 'பாலிப்ஸ்' எனப்படும், சிறிய, தீங்கற்ற உயிரணுக்களின் தொகுப்பு புற்றுநோயாக மாறுகிறது. குடல் பழக்க வழக்கங்களில் தொடர்ச்சியான மாற்றம் அல்லது மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படுவது தான் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறி. சில நேரங்களில் மலக்குடல் ரத்தப்போக்கு அல்லது மலத்தில் ரத்தம், தொடர் வாயு, வயிற்று வலி அல்லது பிடிப்புகள் போன்ற தொடர்ச்சியான வயிற்று உபாதைகளும் ஏற்படுகிறது.
நோய் ஏற்படுவது ஏன்?
பெருங்குடலில் உள்ள செல்கள் அசாதாரணமாக மற்றும் கட்டுப்பாடில்லாமல் வளரும் போது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர், மருத்துவர்கள். வயது, உணவுமுறை, மரபணு ரீதியாக அல்லது வாழ்க்கை முறை மற்றும் உடலியலின் நிலைமை போன்ற சில காரணிகள் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்குகிறது. உடல் பலவீனம் அல்லது தொடர் சோர்வு, எதிர்பாராத எடை இழப்பு, வாந்தி உள்ளிட்டவை அசாதாரணமாக தொடரும் போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
பெருங்குடல் புற்றுநோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. ஆனால், எந்த வயதில் இருப்பவருக்கும் அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர், நோயின் ஆரம்ப கட்ட நிலையை முழுமையாக அறிவதில்லை; அறிகுறிகளும் தெளிவாக தென்படுவதில்லை. பெருங்குடல் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது தான்.
ஆரம்பத்திலேயே, பெருங்குடல், இரைப்பைகளில் மாற்றம் ஏற்படும் போது கண்டறியப்பட்டால், சிகிச்சை முறைகளை உடனடியாக துவக்கி, குணப்படுத்திடலாம். தொடர் வயிறு உபாதை, மலம் பிரச்னை போன்ற பரிசோதனை, 'ஸ்கீரின்' சோதனை செய்யும் போது, தெரிய வர வாய்ப்புள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குடல் வயிறு தொடர்பான துறை, தனிப்பிரிவு செயல்படுகிறது. பெருங்குடல் புற்றுநோய்க்கான பரிசோதனை, சிகிச்சை முறை, மருந்துகள், அறுவை சிகிச்சை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 'கீமோதெரபி' வசதிகள் மூலம் சிகிச்சை தரப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வரும் போது, கதிர்வீச்சு சிகிச்சை வசதிகளும் வந்து விடும். தற்போதைக்கு உயர்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.