ADDED : மார் 03, 2025 05:04 AM

பல்லடம் : பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வாகன போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
விபத்துகளை தடுக்க மையத் தடுப்புகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில், மைய தடுப்புக்கு இணையாக, ரோடு மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில், இடைவெளி விடப்பட்ட இடங்களில் மட்டுமே ரோட்டை கடந்து வந்த வாகனங்கள், தற்போது, மைய தடுப்புகளின் மீது ஏறி ரோட்டை கடப்பது அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க, கன்டெய்னர் லாரிகள், மைய தடுப்பின் மீது ஏறி, ஆபத்தான நிலையில், 'யு டர்ன்' எடுத்து வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறல் தொடர்ச்சியாக நடந்து வருவது விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மைய தடுப்புக்கு இணையாக ரோடு உள்ளதாலேயே இதுபோன்ற விதிமீறல்அதிகரித்துள்ளன.