/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர எல்லைக்குள் நிற்காத புறநகர் பஸ்கள் மேலாண்மை இயக்குனருக்கு புகார்
/
நகர எல்லைக்குள் நிற்காத புறநகர் பஸ்கள் மேலாண்மை இயக்குனருக்கு புகார்
நகர எல்லைக்குள் நிற்காத புறநகர் பஸ்கள் மேலாண்மை இயக்குனருக்கு புகார்
நகர எல்லைக்குள் நிற்காத புறநகர் பஸ்கள் மேலாண்மை இயக்குனருக்கு புகார்
ADDED : ஆக 06, 2024 06:21 AM
உடுமலை: நகர எல்லைக்குள் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்களில், புறநகர் பஸ்கள் நிறுத்தாமல் செல்வது குறித்து, கோவை மண்டல போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருக்கு உடுமலை மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரம் வழியாக, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலை நகர எல்லைக்குள், கொல்லம்பட்டறை, காந்திநகர் உள்ளிட்ட பஸ் ஸ்டாப்கள் உள்ளன. இந்த ஸ்டாப்களின் அருகில், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
எனவே, பழநி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து, உடுமலைக்கும், இங்கிருந்து கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு பயணியர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்களில் காத்திருக்கின்றனர்.
ஆனால், புறநகர் பஸ்கள் எதுவும் அந்த பஸ் ஸ்டாப்களில் நிற்பதில்லை. எனவே, பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று, புறநகர் பஸ் ஏறிச்செல்கின்றனர்.
இது குறித்து உடுமலை பகுதி மக்கள், அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
உடுமலை காந்திநகர் உள்ளிட்ட நகர எல்லைக்குள் உள்ள பஸ் ஸ்டாப்களில், புறநகர் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட சில நாட்களில், காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்ற பஸ்கள் குறித்து விபரங்களுடன் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் அனுப்பியுள்ள பதிலில், காந்திநகர் நகர பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்ற பழநி கிளையை சேர்ந்த தற்காலிக பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பஸ்சை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே அறிவுரை அனைத்து கிளை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளனர்.