/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் இடநெருக்கடியால் தொடர் பிரச்னை ஒட்டுமொத்த வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
/
சந்தையில் இடநெருக்கடியால் தொடர் பிரச்னை ஒட்டுமொத்த வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
சந்தையில் இடநெருக்கடியால் தொடர் பிரச்னை ஒட்டுமொத்த வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
சந்தையில் இடநெருக்கடியால் தொடர் பிரச்னை ஒட்டுமொத்த வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
UPDATED : ஆக 26, 2024 02:22 AM
ADDED : ஆக 26, 2024 01:41 AM

உடுமலை;உடுமலை தினசரி சந்தையில், நிலவும் இடநெருக்கடி மற்றும் கட்டுமான பணிகள் இழுபறியால், தக்காளி வியாபாரிகளும், விவசாயிகளும் அருகிலுள்ள பிற நகரங்களுக்கு வர்த்தகம் செய்ய இடம் பெயரத்துவங்கியுள்ளனர்.
உடுமலை ராஜேந்திரா ரோட்டில், நகராட்சியின் தினசரி சந்தை வளாகம் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதிகளில் இருந்து நாள்தோறும், பல்வேறு வகையான, 700 டன் வரை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர். குறிப்பாக, தக்காளி வர்த்தகத்தில், உடுமலை சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியில், புதிதாக 70 கடைகள் கட்ட, சந்தை வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கியது.
அப்போது முதல், சந்தைக்கு வரும் விவசாயிகளும், வியாபாரிகளும் பல்வேறு பிரச்னைகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.
இழுபறியாக நடக்கும் பணிகளால், போதிய இட வசதி இல்லாமல், தக்காளி உட்பட காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள், பல மணி நேரம் நெரிசலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால், நொந்து போகும் விவசாயிகள், ஒரு வழியாக சந்தைக்குள் வாகனங்களை கொண்டு சென்றாலும், திரும்ப வரவும் பல மணி நேரமாகிறது. பல்வேறு பகுதிகளில், இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது உடுமலை சுற்றுப்பகுதியில், தக்காளி அறுவடை சீசன் துவங்கி நாள்தோறும், 14 கிலோ கொண்ட, 50 ஆயிரம் பெட்டிகள் வரை, சந்தைக்கு வரத்து உள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் நிலவும் இடநெருக்கடியால், தக்காளி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
விலையும் சரிந்து, விற்பனை செய்யும் இடத்திலும், பல மணி நேரம் போராடும் நிலையால், அருகிலுள்ள நகரங்களுக்கு தக்காளியை விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மேலும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளிடம், விளைநிலங்களிலேயே காய்கறிகளை கொள்முதல் செய்து கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிக சாகுபடி பரப்பு உள்ள பகுதிகளில், நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்யும் வகையில், இடவசதி ஏற்படுத்துவது குறித்தும் திட்டமிடுகின்றனர்.
தினசரி சந்தையில் மேம்பாட்டு பணிகளை விரைவாக முடித்து, இடநெருக்கடியை தவிர்க்காவிட்டால், காய்கறி வரத்து வெகுவாக குறைந்து, உடுமலை சந்தை வர்த்தகத்தில், முன்னிலையை இழக்கும் நிலை ஏற்படும்.

