/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாரிக் கொடுக்கும் சலுகைகள்; தகுதியானவரைச் சேர்வதில்லை
/
வாரிக் கொடுக்கும் சலுகைகள்; தகுதியானவரைச் சேர்வதில்லை
வாரிக் கொடுக்கும் சலுகைகள்; தகுதியானவரைச் சேர்வதில்லை
வாரிக் கொடுக்கும் சலுகைகள்; தகுதியானவரைச் சேர்வதில்லை
ADDED : ஆக 29, 2024 11:02 PM

''சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வாரி வழங்கினாலும், தகுதியானவர்களுக்கு அவை சென்று சேர்வதில் சுணக்கம் தென்படுகிறது,'' என்கிறார், சிறுதொழில் முனைவோரான சபேசன்.திருப்பூர், வஞ்சிபாளையத்தில், காட்டன் பாக்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அவர் கூறியதாவது:கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு தொழிலில் வளர்ச்சி தென்படுகிறது. அதே நேரம் குறு, சிறு தொழில்களின் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மானியம், சலுகைகளை வழங்குகின்றன. 'புதிய இளம் தொழில்முனைவோர் உருவாக வேண்டும்' என்ற நோக்கில் தான், வங்கிக்கடன் உள்ளிட்ட பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதற்காக, பட்ஜெட்டில் கூட கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது.
வங்கிக்கடன் எளிதல்ல
குறிப்பாக, 'ஸ்டார்ட் அப்' என்ற பெயரில் புதிய தொழில் முனைவோருக்கு நிறைய ஊக்குவிப்பு, அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இளம் தொழில் முனைவோர் அந்த சலுகைகளை பயன்படுத்தி, தொழில் முனைவோராக விரும்புகின்றனர். இருப்பினும், வங்கிக்கடன், மானியம் உள்ளிட்ட சலுகைகள், எளிதாக கிடைப்பதில்லை.
தேவைப்படும் செல்வாக்கு
அனைத்து தகுதிகளும் இருப்பினும், சில நேரங்களில் அரசு சலுகைகளை பெறுவதில், சிறு, குறு தொழில் முனைவோர் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். செல்வாக்கு, பரிந்துரை உள்ளிட்டவற்றின் வாயிலாகவே அந்த சலுகைகளை பெற வேண்டிய சூழல் உள்ளது.தகுதியான தொழில் முனைவோருக்கு அரசின் சலுகைகள் எளிதாக கிடைக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தினால், சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் நுாறு சதவீதம் நிறைவேறும்.
சவால்களைச் சரிக்கட்டுகிறோம்
எங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து, நாங்கள் அனுப்பும் பொருட்களுக்கு தொகை கிடைக்க தாமதமானாலும், சரியான தேதியில் ஜி.எஸ்.டி., செலுத்த விடுகிறோம். ஜி.எஸ்.டி., மின் கட்டண உயர்வு என தொழில் சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், சவால்களை சரிகட்டி தொழிலை தொடர்ந்து வருகிறோம்.
இவ்வாறு, சபேசன் கூறினார்.