/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாநகராட்சி விரிவாகிறது
/
திருப்பூர் மாநகராட்சி விரிவாகிறது
ADDED : ஜூன் 06, 2024 06:34 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியை விரிவுபடுத்தும் திட்டத்தில், இணைக்கப்பட உத்தேசித்துள்ள ஊராட்சிகள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி தற்போது 60 வார்டுகளுடன் அமைந்துள்ளது. நகராட்சியாக இருந்த போது 52 வார்டுகளுடன் இருந்த திருப்பூர் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது வேலம்பாளையம், நல்லுார் ஆகிய நகராட்சிகளும் 8 ஊராட்சிகளும் இதில் இணைக்கப்பட்டு, 60 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய மாநகராட்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகளை இணைக்கும் வகையில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், பெருமாநல்லுார், பழங்கரை, பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், அ.பெரியபாளையம், எஸ்.பெரியபாளையம், முதலிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கணபதிபாளையம், கரைப்புதுார், அருள்புரம், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், இடுவாய், மங்கலம், கணியாம் பூண்டி மற்றும் வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகள் இணைக்கலாம் என ஒரு உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்த பகுதிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கிராமங்களின் பரப்பு, மக்கள் தொகை விவரம், வருவாய் விவரங்கள் ஆகியன கேட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து மாநகராட்சி விரிவாக்கம் குறித்த கருத்துருவில் இணைக்கப்படும்.