/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில் உயிரிழப்பு; ரூ.80 லட்சம் இழப்பீடு
/
விபத்தில் உயிரிழப்பு; ரூ.80 லட்சம் இழப்பீடு
ADDED : மார் 08, 2025 11:20 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்வில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் என்னும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் துவங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல், 35. இவர் குடும்பத்துடன் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் தங்கி குமரானந்தபுரத்தில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார். 2022 ஆக. 3ல், ஊத்துக்குளி ரோட்டில் பைக்கில் செல்லும்போது சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தார். ஞானவேலுவின் மனைவி சுகன்யா, நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
திருப்பூர் சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் இவ்வழக்கு நடந்தது. நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில், ஞானவேலுவின் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 80 லட்சம் இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்கான காசோலையை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் அக்குடும்பத்தாரிடம் வழங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஷபீனா, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் நீதிபதிகள் ஸ்ரீகுமார் மற்றும் பாலு மற்றும் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.