ADDED : ஜூலை 12, 2024 12:33 AM

பல்லடம் : பல்லடம் அடுத்த கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி 67. இவருக்கு சொந்தமான, 7.17 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி, விவசாயிகள் நேற்று பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், '' மூலப்பத்திரம் இல்லாமல், முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தி தெய்வசிகாமணிக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் பத்திரப்பதிவு செய்துள்ளார். பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு பத்திரப்பதிவு செய்ய முடியாது. ஆனால், மூல பத்திரமே இல்லாமல் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம்
ஏற்கனவே முறையிட்டுள்ளோம். போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்றனர்.
முன்னதாக, விவசாயிகள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனால், பல்லடம் பத்திர அலுவலகத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் பத்திரப்பதிவு பணி தடைபட்டது.

