/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி நியமனம் அரசாணை பிறப்பித்தும் அமல்படுத்துவதில் தாமதம்
/
பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி நியமனம் அரசாணை பிறப்பித்தும் அமல்படுத்துவதில் தாமதம்
பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி நியமனம் அரசாணை பிறப்பித்தும் அமல்படுத்துவதில் தாமதம்
பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி நியமனம் அரசாணை பிறப்பித்தும் அமல்படுத்துவதில் தாமதம்
ADDED : ஜூலை 24, 2024 10:22 PM
திருப்பூர்:தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் பணி நியமன கனவு, நனவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த, 2003ல், தமிழகத்தில், பேரூராட்சி நிர்வாக பணிகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டன. வரவு, செலவு அறிக்கை, வளர்ச்சி பணிகள் குறித்த அனைத்து விபரங்களும் 'ஆன் லைன்' வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும், கடந்த, 2004ல், அரசு சார்பில் கம்ப்யூட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கென தனியாக பணியிடம் ஏற்படுத்தாததால், அந்தந்த பேரூராட்சி சார்பில் சிறப்பு மன்றக்கூட்டம் நடத்தி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச சம்பளம், தற்போது வழங்கப்படுகிறது. இதில், பட்டப்படிப்பு முடித்தவர், டிப்ளமோ முடித்தவர்கள் என, பலரும் பணி செய்து வருகின்றனர்.
'தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 'தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என ஆட்சிக்கு வரும் கட்சிகள் நம்பிக்கை ஏற்படுத்துகின்றன. அதை நம்பி அவர்களும் தொடர்ந்து பணிபுரிகின்றனர். ஆனால், பணி நிரந்தரம் செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதுவும், இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தற்போதைய தி.மு.க., அரசு, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பணி நிரந்தரம் செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
பேரூராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், 20 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாகவே கடந்துவிட்டனர். தற்போதைய விலைவாசி, பொருளாதார நிலைக்கேற்ப ஊதியம் இல்லாததால், அவர்களது குடும்பத்தினரின் பொருளாதார நிலை உயரவில்லை. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் இவர்களுக்கு இல்லாததால், மாற்று பணிக்கு செல்லவும் முடிவதில்லை. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது' என்றனர்.

