/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் சுற்று பிரகாரத்தில் மணல் தேக்கம்; திருமூர்த்திமலையில் பக்தர்கள் அவதி
/
கோவில் சுற்று பிரகாரத்தில் மணல் தேக்கம்; திருமூர்த்திமலையில் பக்தர்கள் அவதி
கோவில் சுற்று பிரகாரத்தில் மணல் தேக்கம்; திருமூர்த்திமலையில் பக்தர்கள் அவதி
கோவில் சுற்று பிரகாரத்தில் மணல் தேக்கம்; திருமூர்த்திமலையில் பக்தர்கள் அவதி
ADDED : ஜூன் 06, 2024 11:40 PM

உடுமலை:திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் தேங்கியுள்ள மணல் அகற்றப்படாததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலை மீது பஞ்சலிங்கம் கோவில் மற்றும் அருவி உள்ளது. மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.
பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை உள்ளதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
மலையடிவாரத்தில், ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ள நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள், ஓடைகள் வழியாக திருமூர்த்தி அணைக்கு வருகிறது.
கனமழை பெய்தால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்து ஓடுகிறது. கடந்த இரு மாதமாக, திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பல முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.
மழை குறைந்து, வெள்ள நீர் வடிந்ததும், கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. ஆனால், மூலவர் சன்னதியை சுற்றி வரும் வகையில், சுற்றுப்பிரகாரம் அமைந்துள்ளது. இப்பகுதியில், கன்னிமார் சன்னதி பகுதி முதல், அமணலிங்கேஸ்வரர் சன்னதி வரை, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல், பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது.
இதனால், பக்தர்கள் கோவில் சுற்றுப்பிரகாரத்தை சுற்றி வந்து, சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், கோவில் வளாகமும் மணல், கழிவு தேங்கி துாய்மையில்லாமல் உள்ளது.
எனவே, வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு, கோவில் சுற்றுப்பிரகாரத்தில் தேங்கியுள்ள மணல் திட்டை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.