/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய்த்துறை உதவிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு
/
வருவாய்த்துறை உதவிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு
வருவாய்த்துறை உதவிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு
வருவாய்த்துறை உதவிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு
ADDED : ஆக 26, 2024 11:15 PM
திருப்பூர்;பல மாதங்களாகியும், வருவாய்த்துறை மூலமாக உதவித்தொகை கிடைக்காமல், மாற்றுத்திறனாளிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான உதவிகளை வழங்குகிறது. அதாவது, மாற்றுத்திறனாளிகளும், இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கில், தேவையை பொறுத்து, நல உதவி வழங்கி வருகிறது.
அவ்வகையில், குறைந்தபட்சம், 75 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளியாக இருந்தால், பராமரிப்பு உதவி என்ற பெயரில், மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பாதிப்பு குறைந்தபட்சம், 40 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், அன்றாட பணிகளை மட்டுமே கவனிக்க முடியும்; மற்ற பணிகளுக்கு செல்ல முடிவதில்லை. இதனால், அரசு வழங்கும் உதவி மட்டுமே, வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக, புதிய உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், வருவாய்த்துறை வழங்கும் மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில், விண்ணப்பித்து, ஆறு மாதங்களுக்கு மேலாக, மாற்றுத்திறனாளிகள், பரிதாபமாக காத்திருக்கின்றனர். அதாவது, 40 சதவீதம் முதல், 75 சதவீதம் வரையிலான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, புதிய உதவி வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருவதால், தங்களுக்கு உடனுக்குடன் உதவித்தொகை கிடைப்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாவிலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வருவாய்த்துறை உதவித்தொகையை பெற்றுத்தர, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது,''வருவாய்த்துறையின், சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெற்ற விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை குறித்து, தாலுகா வாரியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.