/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோக குளறுபடி; உப்பு நீர் கலப்பு
/
குடிநீர் வினியோக குளறுபடி; உப்பு நீர் கலப்பு
ADDED : ஜூலை 12, 2024 12:37 AM
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சிகளில், அத்திக்கடவு, பில்லுார் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பற்றாக்குறை காரணமாக, சில ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் மேட்டுப்பாளையம் குடிநீரும் கூடுதலாக வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு, வட்டாரம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு ஊராட்சிகளிலும் உள்ளது. ஆனால், நிர்ணயித்த அளவு குடிநீர் வினியோகிக்கப்படுவதாகவும், இந்த அளவீடு மீட்டரில் பதிவு செய்யப்படுவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
குற்றச்சாட்டுகள் தொடர் கதை
மீட்டரில் சரியான அளவு இருக்க, ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு வந்த பின் குறைவது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும், சில தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு கூடுதல் குழாய் இணைப்பு வழங்குவது மட்டுமின்றி, குடிநீரும் முறைகேடாக வினியோகிக்கப்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாகவே, நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
மறைமுகமாக நடக்கும் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தால் பலரும் சிக்குவர் என்பதால், இதிலிருந்து தப்பிக்கவே, குடிநீருடன் உப்பு நீர் கலந்து வினியோகிக்கப்படுகிறது. இதனால் சலிப்படையும் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதையே கைவிடுகின்றனர்.
குடிநீருடன் உப்புநீர் கலந்து வினியோகிப்பதால், இதை பயன்படுத்தும் குழந்தைகள், தாய்மார்கள், பெரியவர்கள் உள்ளிட்டோர் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நீண்ட காலமாக உள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து, அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தனிக்குழு ஒன்றை அமைத்து, ஊராட்சிகளில் நடக்கும் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

