/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரைப்புதுாரில் 'கரைபுரளும்' போதை பரிவர்த்தனை?
/
கரைப்புதுாரில் 'கரைபுரளும்' போதை பரிவர்த்தனை?
ADDED : ஜூலை 04, 2024 04:59 AM
பல்லடம் : கரைப்புதுார் கிராமத்தில், போதைப் பொருட்கள் பரிவர்த்தனை நடப்பதாக பொதுமக்கள் சந்தேகித்து வரும் நிலையில், போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் தாலுகாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது கரைப்புதுார். அருள்புரம், உப்பிலிபாளையம், சின்னக்கரை, சேகாம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட குக்கிராமங்களில் பல ஆயிரம் தொழிலாளர்கள் மிக நெருக்கமாக வசித்து வருகின்றனர்.
இவர்களுடன் கலந்து வாழும் சமூக விரோதிகளை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.
பல்லடம் உட்கோட்டத்தில், அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதியாகவும் கரைப்புதுார் உள்ளது. வழிப்பறி, திருட்டு, கொள்ளை, குட்கா விற்பனை என குற்றச்சம்பவங்களுக்கு இங்கு குறை இருப்பதில்லை.
போதைப் பொருட்களின் பரிவர்த்தனையும் நடந்து வருவதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். ஜமாபந்தியிலும் கூட, பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
தொழிலாளர்கள் போர்வையில், போலி ஆதார் அட்டை மற்றும் ஆவணங்களை வைத்துக் கொண்டு, சமூக விரோதிகள் வசிக்கின்றனர். இவர்களால், அடிக்கடி பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
இதனால் கிராமத்தின் அமைதி சீர்குலைந்து வருகிறது. சமூக விரோதிகளை எதிர்த்து புகார் தெரிவித்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், புகார் அளிக்கவும் யாரும் தயாராக இல்லை.
எனவே, மாவட்ட போலீசார், தனி கவனம் செலுத்தி, கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு, சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.