/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாக்டர்கள் 24 மணி நேர போராட்டம் --- மருத்துவ சேவைகள் பாதிப்பு
/
டாக்டர்கள் 24 மணி நேர போராட்டம் --- மருத்துவ சேவைகள் பாதிப்பு
டாக்டர்கள் 24 மணி நேர போராட்டம் --- மருத்துவ சேவைகள் பாதிப்பு
டாக்டர்கள் 24 மணி நேர போராட்டம் --- மருத்துவ சேவைகள் பாதிப்பு
ADDED : ஆக 18, 2024 02:19 AM

திருப்பூர்:கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வலியுறுத்தி, திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். டாக்டர்கள் போராட்டம் காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை மருத்துவ சேவைகள் பாதித்தன.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர்., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 8ம் தேதி பணியில் இருந்து முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுதும், இவ்விவகாரம் புயலை கிளப்பியுள்ள நிலையில், அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில்
பணி புறக்கணிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் பணியை காலை, 7:30 முதல், 8:30 மணி வரை டாக்டர்கள் புறக்கணித்தனர்; இதனால், ஒரு மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
மீண்டும், 9:00 மணி முதல், மருத்துவமனை வழக்கம் போல் இயங்கியது. தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான நோயாளிகளுக்கு மட்டும் நேற்று மருத்துவம் பார்க்கப்பட்டது; நேற்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் துவங்கி, மருத்துவமனை நுழைவு வாயில், தாராபுரம் ரோடு புதுார் பிரிவு சந்திப்பு வரை வந்த டாக்டர்களின் ஊர்வலம், மீண்டும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.
கோரிக்கைகள்
'மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் வேண்டும்; பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்; அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில், 'சிசிடிவி' கேமரா கட்டாயமாக்க வேண்டும்,' உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி வந்தனர். 'கருப்பு பேட்ஜ்' அணிந்து ஊர்வலம் மற்றும் போராட்டத்தில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் சுரேஷ்ராஜ்குமார், துணை செயலாளர் டாக்டர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.,) திருப்பூர் கிளை, துணைத்தலைவர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்,'அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த போராட்டத்தில், ஐ.எம்.ஏ., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றோம். போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 250க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இயங்கவில்லை. மொத்தமுள்ள, 1,500 டாக்டர்கள் பணிக்கு செல்லாமல், ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிய கிளினிக் துவங்கி, பெரிய மருத்துவமனை வரை பலவும் இயங்கவில்லை. டாக்டர்கள் போராட்டத்தால், நாள் முழுதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது,' என்றார்.
கண்டன ஊர்வலம்
இந்நிலையில், பல், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் சங்கம் சார்பில், மாநகராட்சி அலுவலகம், குமரன் நினைவிடம் ஆகிய இடங்களில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.
---
கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், டாக்டர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் திருப்பூரில் நேற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பேரணி சென்றனர். பேரணியில் பங்கேற்றோர்.
பேரணியாகச் சென்ற டாக்டர்கள்.
----
திருப்பூரில், பல் மருத்துவர் சங்கம் சார்பில் நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற டாக்டர்கள்.