/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைத்தறிச்சத்தம் என்றும் ஒலிக்குமா?
/
கைத்தறிச்சத்தம் என்றும் ஒலிக்குமா?
ADDED : ஆக 25, 2024 12:37 AM

சந்தை பொதுவாக ஊருக்கு வெளியிலோ அல்லது மக்கள் கூடும் இடத்திலோ தான் இருக்கும். ஆனால், கல்லுாரிக்குள் சந்தை என்றதும் சற்றே வித்தியாசம் தென்பட்டது. ஆவலுடன், மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கல்லுாரிக்கு சென்றோம். களை கட்டிய கல்லுாரி சந்தையில், மாணவியர் கூட்டம் அலைமோதியது. வாய்க்கு ருசியான உணவு பொருட்கள், அழகுக்கு மெருகு சேர்க்கும் பேன்ஸி பொருட்களை வாங்கும் ஆவலில் சந்தைக்குள் அங்குமிங்கும் உலவிக்கொண்டே இருந்தனர் மாணவியர்.
'நாங்கள் தான் கடைசித்தலைமுறை'
கண்காட்சியில், கைத்தறி புடவை கண்காட்சி அரங்கும் இடம் பெற்றிருந்தது. நெசவாளி மகாலட்சுமியிடம், சந்தை நிலவரம் கேட்டோம். உடன் வந்திருந்த தன் கணவருடன் சேர்ந்து பேசினார்.''ரொம்ப வருத்தப்பட்டு சொல்றோங்க. கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடும் கடைசி தலைமுறை நாங்களாதான் இருப்போம். ஒரு காலத்துல நெகமம் பட்டு, ரொம்ப பிரபலமா இருந்துச்சு. நிறைய பேரு வாங்கினாங்க; பெரிய பெரிய கடைக்காரங்களும் நிறைய 'ஆர்டர்' கொடுப்பாங்க. கணவன், மனைவின்னு குடும்பமா சேர்ந்து தறி ஓட்டுவோம். ஓரளவு வருமானம் வந்துச்சு. ஆனா, இப்போ, நிலைமை தலைகீழா மாறிப்போச்சு.ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் இருக்கு. ஆனா, நெசவு தொழிலில் வருமானம் போதுமானதா இல்லாததால, நெசவாளர்களின் பிள்ளைங்க எல்லாம், படிச்சு, வேற வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. 'நீங்க படற கஷ்டம், நாங்க படமாட்டோம்'ன்னு சொல்றாங்க'' என யதார்த்தத்தை கூறினர்.
கைத்தறி ஆடைகள் வாங்கணும்
''நுால் துவங்கி, பட்டு, ஜரிகை, உற்பத்தி பண்ற புடவைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஜி.எஸ்.டி., கட்டணும்; ரொம்ப சிரமமா இருக்கு. கைத்தறி ஆடைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க மகளிர் திட்டம் மூலமா நிறைய ஊக்குவிப்பு தர்றாங்க. இருந்தாலும், நெசவுத் தொழில் மீண்டும் செழிக்கணும்னா, அரசாங்கம் சொல்ற மாதிரி அரசு ஊழியர்கள் எல்லாம், கைத்தறி ஆடைகளை வாங்கணும். இந்த மாதிரி நிறைய கண்காட்சி நடத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்,''
'கைத்தறிச்சத்தம் என்றும் ஒலிக்குமா?' என்ற சந்தேகம் தொனித்தது, இருவரின் குரலிலும்.

