/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீரின் தரம்; மக்களுக்கு தீரவில்லை சந்தேகம்
/
குடிநீரின் தரம்; மக்களுக்கு தீரவில்லை சந்தேகம்
ADDED : மார் 25, 2024 12:52 AM

அவிநாசி;''அவிநாசியில் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தில் சந்தேகம் உள்ளது. சளி, காய்ச்சல், உடல் வலி பாதிப்புகள் தொடர்கின்றன'' என்று நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் மத்திய இணையமைச்சர் முருகனிடம் மனு அளித்தனர்.
நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான முருகன் நேற்று அவிநாசியில் பிரசாரத்தை துவக்கினார். 'நல்லது நண்பர்கள்' அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் செந்தில்குமார், ஜீவானந்தம், மகேந்திரன் ஆகியோர் முருகனிடம் அளித்த மனு:
நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் 30 லட்சம் லிட்டர் குடிநீர், அவிநாசிக்கு கிடைக்கிறது. கடந்த 2021ல் கொரோனா பேரிடர் காலத்தில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குடிநீரைப் பயன்படுத்தியது முதல் சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட உபாதைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக உடல் நிலை இவ்வாறு உள்ளதாகவும் கால நிலை மாறும் போது சரியாகிவிடும் என இருந்தனர்.
தற்போதும் அதே நிலை தொடர்வதால் மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் மீது சந்தேகம் இருந்தது.
பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு தரப்பட்டது. பரிசோதனையில் குடிநீரில் காரத்தன்மை அதிகம் உள்ளது என உறுதி செய்யப்பட்டது.
பேரூராட்சியின் முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 14 லட்சம் குடிநீரும், மூன்றாவது குடிநீர் திட்டத்தில் 11 லட்சம் குடிநீரும் வந்து கொண்டிருந்தது. தற்போது அவிநாசி பகுதிக்கு முதல் இரு திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அவிநாசியில் உள்ள 36 பொதுக் குழாய்களில் தினசரி இரு வேளைகளில் 3 மணி நேரம் முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
----
மத்திய இணையமைச்சர் முருகனிடம் மனு அளித்த 'நல்லது நண்பர்கள்' அறக்கட்டளையினர்.

