/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை இல்லா தமிழகம்': மாணவர்கள் உறுதிமொழி
/
'போதை இல்லா தமிழகம்': மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஆக 12, 2024 11:45 PM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லுாரிகளில், 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.
திருப்பூர் மாவட்ட போலீசார் சார்பில், அனைத்து ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியும், ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது. அவ்வகையில், இரண்டு விழிப்புணர்வு ஊர்வலங்கள், 69 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அவிநாசி அரசு கல்லுாரியில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல்துறை, கல்லுாரியின் போதை தடுப்பு பிரிவு இணைந்து நடத்தின.
முதல்வர் நளதம் வரவேற்றார். எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமை வகித்தார். அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலை வகித்தார்.
எஸ்.பி., பேசுகையில், ''போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவரால் அவரது குடும்பம், அவரை சுற்றியுள்ள நண்பர்கள் வட்டம் என பலரும் பாதிக்கப்படுவர். போதைப்பழக்கத்தை பழகியுள்ள சக நண்பர்களை அடையாளம் கண்டு உரிய முறையில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டிய கடமை உண்மையான நட்புக்கு உள்ளது'' என்றார்.
அனைவரும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் அடங்கிய உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., சர்வேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கல்லுாரி மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்ட போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
* திருப்பூர் குமரன் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி, மதுவிலக்கு பிரிவு உதவி எஸ்.ஐ.,க்கள் வனஜா, கிரிஜா, ரமா அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.
* திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை கமிஷனர் கிரீஸ் அசோக் யாதவ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசியும், உறுதிமொழியும் எடுத்தனர்.
---
அவிநாசி அரசு கல்லுாரியில் நேற்று 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., அபிேஷக் குப்தா, கல்லுாரி முதல்வர் நளதம் உள்ளிட்டோர் உறுதிமொழியேற்றனர்.

