/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்
/
காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்
ADDED : ஏப் 27, 2024 12:49 AM
திருப்பூர்;கடும் வெயில் காரணமாக, மேய்ச்சல் நிலம் தரிசாக மாறிவிட்டதால், கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், குளிர் பருவத்தில் பெய்ய வேண்டிய மழை, இந்தாண்டு பொழியவில்லை. கோடை பருவம் துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும் மழையே இல்லை. கடைசியாக, வடகிழக்கு பருவத்தில் பெய்த மழைக்கு முளைத்த செடி, கொடிகள் காய்ந்து, மேய்ச்சல் நிலம் தரிசாக மாறிவிட்டது.
காய்ந்த நிலையில் உள்ள செடி, கொடிகளையும் ஆடு, மாடுகளும் தீவனமாக உட்கொள்ளும். இருப்பினும், சிலர் தீ வைத்து விடுவதால், மேய்ச்சல் நிலம் மழுவதும் எரிந்து சாம்பலாகியும் விடுகிறது. இத்தகைய காரணத்தால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் தீவன வசதியில்லாமல் போய்விட்டது.
கையிருப்பு உலர் தீவனமும் வேகமாக காலியாகி வருகிறது; வெயில் கடுமையாக இருப்பதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடிவதில்லை. கிராமப்புறத்தில் மேய்ச்சல் நிலமாக இருக்கும் மந்தை நிலங்களும் காய்ந்து போயுள்ளன. இனிமேல் தான் கத்திரி வெயில் துவங்கப்போகிறது.
இதன்காரணமாக, கால்நடைகளுக்கு, கடுமையான தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வறட்சி பாதித்த பகுதிகளை கண்டறிந்து, கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

