/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செய்திதுறை அமைச்சர் தொகுதியில் டுபாக்கூர் நிருபர்கள் அட்ராசிட்டி; தொழிற்துறையினர் அதிருப்தி
/
செய்திதுறை அமைச்சர் தொகுதியில் டுபாக்கூர் நிருபர்கள் அட்ராசிட்டி; தொழிற்துறையினர் அதிருப்தி
செய்திதுறை அமைச்சர் தொகுதியில் டுபாக்கூர் நிருபர்கள் அட்ராசிட்டி; தொழிற்துறையினர் அதிருப்தி
செய்திதுறை அமைச்சர் தொகுதியில் டுபாக்கூர் நிருபர்கள் அட்ராசிட்டி; தொழிற்துறையினர் அதிருப்தி
ADDED : ஆக 17, 2024 07:58 PM

காங்கேயம்:காங்கேயம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், அரசு அலுவகங்களில் மாதாந்திர பத்திரிக்கை நிருபர்கள் என கூறிக்கொண்டு பணம் கேட்டு மிரட்டும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. செய்தித்துறை அமைச்சரின் தொகுதியிலேயே நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் தொழிற்துறையினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கேயம் அருகே படியூரில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மூன்று நபர்கள் ஆலைக்குள் நுழைந்து ஆலையை புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அரிசி ஆலை நிர்வாகத்தினரை பார்த்து புகை அதிகளவில் வெளியேறுகிறது.
இதுகுறித்து செய்தி வெளியிடாமல் இருக்க பணம் தருமாறு கூறியுள்ளனர். அதற்கு ஆலை நிர்வாகத்தினரோ சரியான விதிகளின்படி தான் ஆலை இயக்கப்படுகிறது. எந்த செய்தி வேண்டுமானாலும் வெளியிடுங்கள் சட்டரீதியாக பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து அந்த வசூல் நிருபர்கள் ஆலை நிர்வாகத்தினரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆலை நிர்வாகத்தினர் 3 போலி நிருபர்களையும் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் அளிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களில் இருவர் அங்கிருந்து தப்பி சென்று, செய்தி எடுக்க சென்ற எங்களை ஆலை நிர்வாகத்தினர் தாக்கியதாக காங்கேயம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அரிசி ஆலைக்கு சென்று விசாரித்த போது, போலி நிருபர்கள் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. மேலும் மூவரில் ஒருவர் சும்மா துணைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
அரிசி ஆலை நிர்வாகத்தினரிடமும் பிரச்சனையை இத்தோடு விடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொழிற்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாதந்திர பத்திரிக்கையின் நிருபர்கள் என கூறிக்கொண்டு கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் காங்கேயம், தாரபுரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை குறிவைத்து வசூல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த புகார், இந்த புகார் என சிறு,குறு,நடுத்தர தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
அதேபோல் டாஸ்மாக் பார், அரசு அலுவலகங்கள் என மாத மாமூல் வசூலிலும் ஈடுபடுகின்றனர். செய்திதுறை அமைச்சர் தொகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் இது போன்ற குற்றசாட்டுகளை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

