/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!
/
'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!
ADDED : செப் 03, 2024 01:18 AM

திருப்பூர்;ஊட்டச்சத்து வார விழாவில், இரும்புச் சத்து நிறைந்த உணவு பதார்த்தங்களால் செய்யப்பட்டட விநாயகரை, அனைவரும் வியப்புடன் பார்த்து, விவரங்களை கேட்டறிந்தனர்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், இம்மாதம் முழுவதும் 'போஷன் மா' என்கிற பெயரில் தேசிய ஊட்டச்சத்து விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்க நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த பதாகைகள் ஏந்தியவாறு அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலமாக சென்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலக வளாகம் முதல், தென்னம்பாளையம் வரை ஊர்வலம் சென்று திரும்பியது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், ஊட்டச்சத்து உணவு பொருட்களை தயாரித்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் வைத்திருந்தனர். பாகற்காய், அச்சு வெல்லம், சுண்டைக்காய், எள்ளு, பேரீச்சம்பழம், ராகியில் உருவான இரும்புச்சத்து விநாயகர், காய்கறி பொம்மை, சிறுதானியத்தாலான கும்பம், நடன மங்கை, யோகாசனம் என ஊட்டச்சத்துக்களை கலை நயத்தோடு காட்சிப்படுத்தியிருந்தனர்.
ராகி லட்டு, வரகு லட்டு, வரகு முறுக்கு என ஊட்டச்சத்து மிகுந்த உணவு பதார்த்தங்கள், அங்கன்வாடி மையம், பொது சுகாதாரம், கல்வியின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் அவசியம் குறித்த கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) மகாலட்சுமி சங்கீதா, பெண்கள் ரோட்டரி தலைவர் கிருத்திகா உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.