/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழிகாட்டி பலகை புதுப்பிக்க எதிர்பார்ப்பு
/
வழிகாட்டி பலகை புதுப்பிக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 01, 2024 12:48 AM

பல்லடம்;பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகள், புதுப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண்: 81, பல்லடம், தாராபுரம், கரூர், திருச்சி வழியாக சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. கறிக்கோழி வாகனங்கள், டிப்பர் லாரிகள், கண்டெய்னர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன.
கோவை வழியே கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு இந்த ரோடு முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் சரக்கு வாகனங்கள் சரியான வழித்தடத்தை பின்பற்ற, தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி பெயர் பலகைகள் பெரிதும் உதவுகின்றன.
பல்லடம் -- காரணம்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்லடம் - வெள்ளகோவில் வரை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே இருந்த பெயர் பலகைகள் அனைத்தும் சேதமடைந்து, வானமே எல்லையாக காட்சியளித்து வருகின்றன.
பல்லடத்தில் இருந்து, திருப்பூர், மதுரை, கொச்சி, அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் செல்லும் பல்வேறு நெடுஞ்சாலைகள் பிரிகின்றன. பல்லடத்தில் உள்ள பெயர் பலகைகள் சேதமடைந்துள்ளதால், பல்வேறு மாநில சரக்கு வாகனங்கள், சரியான பாதை தெரியாமல் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் குழப்பமின்றி பயணிக்க, தேவையான இடங்களில் பெயர் பலகைகளை புதுப்பிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.