/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை சீரமைப்புக்கு தேவை நிவாரணம் வளர்ச்சி வாரியத்திடம் எதிர்பார்ப்பு
/
தென்னை சீரமைப்புக்கு தேவை நிவாரணம் வளர்ச்சி வாரியத்திடம் எதிர்பார்ப்பு
தென்னை சீரமைப்புக்கு தேவை நிவாரணம் வளர்ச்சி வாரியத்திடம் எதிர்பார்ப்பு
தென்னை சீரமைப்புக்கு தேவை நிவாரணம் வளர்ச்சி வாரியத்திடம் எதிர்பார்ப்பு
ADDED : செப் 11, 2024 02:42 AM
உடுமலை:பல்வேறு காரணங்களால், காய்ப்புத்திறன் இழந்து கருகி வரும் தென்னை மரங்களை அகற்றி விட்டு, புதிதாக தென்னங்கன்று நடவு செய்ய, தென்னை வளர்ச்சி வாரியத்தின் சீரமைப்பு மற்றும் நிவாரண நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 60 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருவமழை பொழிவு குறைந்ததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து போதிய தண்ணீர் கிடைக்காமல், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு நோய்த்தாக்குதல்களும், தென்னை மரங்களை தாக்கின. தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ப்புத்திறன் இல்லாமல், பல மரங்கள், வெறுமையாக காட்சியளிக்கின்றன.
மேலும், வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உடுமலை பகுதிக்கும் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நோய் தாக்கிய மரங்கள், முற்றிலுமாக பச்சையம் இழந்து, காய்ப்புத்திறனை இழக்கின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகள் போதிய பலன் அளிக்காத நிலையில், அம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது.
சீரமைப்பு நிதி
இத்தகைய பாதிப்புகளிலிருந்து தென்னை சாகுபடியை மீட்க, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முன்பு, ஒரு தென்னை மரத்திற்கு, 1,700 ரூபாய் வீதம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இரண்டு ஆண்டுக்கு முன், பல்வேறு இழுபறிக்குப்பிறகு, சீரமைப்பு நிதி, தென்னை வளர்ச்சி வாரியத்திலிருந்து, மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தற்போது, வாடல் நோய் காரணமாக, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நோய் தாக்கிய மரங்களை அகற்றி விட்டு, புதிதாக மரக்கன்று நடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இத்தருணத்தில், பாதிக்கப்பட்டுள்ள மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சீரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்க தென்னை வளர்ச்சி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிதியை கூடுதலாக பெற்று, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், தமிழக அரசு கிடைக்க செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.