/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜப்பானுக்கு ஏற்றுமதி: நற்தருணம் பிறந்தது
/
ஜப்பானுக்கு ஏற்றுமதி: நற்தருணம் பிறந்தது
ADDED : ஜூன் 27, 2024 11:24 PM
திருப்பூர் : ஜப்பான் நாட்டுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்வதற்கான நற்தருணம், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்குப் பிறந்துள்ளது.
ஜப்பான் நாட்டுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக அரங்கில் நேற்று நடந்தது.
தரம் முக்கியம்
இதில், ஜப்பானுக்கான தரபரிசோதனை நிறுவனமான பி.க்யூ.சி., இந்தியா நிறுவன பிரதிநிதி கார்த்திக் பேசியதாவது:
ஜப்பான் நாட்டு வர்த்தகர்கள், ஆயத்த ஆடைகளின் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆடை உற்பத்தி நிறுவனங்களில், மூன்றாம்நபர் நிறுவனங்கள் மூலம் தரம் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆடை உற்பத்த்தியை பொறுத்தவரை தொழிலாளர் திறன் சார்ந்தது. மெஷினரிகளை உற்பத்தி செய்வது போன்று, ஆயிரம் ஆடைகள் எனில், அந்த ஆயிரம் ஆடைகளையும் ஒரே சீராக தயாரிப்பது சாத்தியமில்லை; பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும்.
வர்த்தகர் தொடர்பு
ஜப்பானுக்காக ஆடை தயாரிக்கும்போது, உற்பத்தி நிறுவனங்கள், அந்நாட்டு வர்த்தகர்களுடன் தடையில்லாத தொடர்பு வைத்திருக்கவேண்டும்; உற்பத்தி சார்ந்த எவ்வித சிக்கல்களையும் உடனுக்குடன், வர்த்தகர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
தயாரிப்பு நிலையில் உள்ள ஆடைகளின் நிறை, குறை சார்ந்த தகவல்களை, தங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதை எதிர்பார்ப்பது ஜப்பான் வர்த்தகர்களின் வழக்கம்.
சுமூகப் பயணம்
அவ்வாறு தயாரிப்பு சார்ந்த பிரச்னைகளை உடனடியாக தெரிவிக்கும்போது, அதற்கான தீர்வுகாண வர்த்தகர்களும் ஆலோசனைகள் வழங்குவர். ஆடைகளில் ஏற்படும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. 'அடுத்தமுறை இதுபோன்று நிகழக்கூடாது' என்பதுபோல் அறிவுரைகள் கூறிவிட்டு, ஆடை உற்பத்தி நிறுவனத்துடனான தங்கள் பயணத்தை சுமூகமாக தொடர்வர்.
கடந்த 35 ஆண்டுகளாக ஜப்பான் நாட்டு சந்தையை கவனித்துவருகிறேன். ஐரோப்பா, அமெரிக்க நாட்டு வர்த்தகர்கள்போல், அதிக எண்ணிக்கையிலான ஆடை தயாரிப்பு ஆர்டர்களை, ஜப்பான் வர்த்தகர்கள் நிராகரிப்பதில்லை.
வசப்படுத்துங்கள்
இந்தியா - ஜப்பான் இடையிலான வர்த்தகத்தில், வர்த்தக சமனற்ற நிலையே தொடர்கிறது. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதைவிட, மிக குறைந்த மதிப்பிலான பொருட்களே நமது நாட்டிலிருந்து, ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவைவிட, நமது நாட்டிலிருந்து ஜப்பானுக்கான சரக்கு ஏற்றுமதி கட்டணம் மிகவும் குறைவு.
ஜெய்ப்பூரிலிருந்து அதிக எண்ணிக்கையில் கோடைக்கால ஆடை ரகங்கள், ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. ஜப்பான் சந்தை, எல்லாவகையிலும் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாகவே உள்ளது; வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
டெக்ஸ்டைல் கமிட்டி துணை இயக்குனர் கவுரி சங்கர் நன்றி கூறினார்.