/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை காவலர்கள் கூடுதலாக தேவை! ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு
/
துாய்மை காவலர்கள் கூடுதலாக தேவை! ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு
துாய்மை காவலர்கள் கூடுதலாக தேவை! ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு
துாய்மை காவலர்கள் கூடுதலாக தேவை! ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2024 02:54 AM
உடுமலை;கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த, கூடுதலாக துாய்மை காவலர்கள் நியமித்து, தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என, மூன்று ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், சுகாதார பணிகளை மேற்கொள்ள, கடந்த, 2018ல், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், கிராமங்களில், குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப, துாய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், வீடுதோறும் சென்று, மட்கும், மட்காத குப்பையை, பிரித்து சேகரிப்பதில், பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.
சில குடியிருப்புகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே, பணியாளர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.
எனவே, மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அடிப்படையில், கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களில், பொது சுகாதாரம் பாதித்து, திறந்தவெளியில் குப்பையை குவித்து, தீ வைத்து எரிப்பது தொடர்கதையாக உள்ளது.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து ஊராட்சிகளிலும், மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துாய்மை காவலர்களுக்கு எவ்வித உபகரணங்களும் முறையாக வழங்கப்படுவதில்லை. காலியிடங்களில் கிடக்கும், உடைந்த மதுபாட்டில்கள், கண்ணாடித்துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர்.
கிராம சாக்கடைகளை துார்வாரும் போது, கையுறை உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் இல்லாமல், வெறும் கையில், பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனால், பணியாளர்கள் காயமடைவதுடன், நோய்த்தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. பராமரிப்பில்லாத தள்ளுவண்டிகளை, தள்ள முடியாமல், திணறுகின்றனர்.
கிராம பொது சுகாதாரத்தில், முக்கிய பங்கு வகிக்கும், துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை முறையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.