ADDED : ஜூலை 27, 2026 05:21 PM
திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுப்பதால்... நிலங்களை வளமாக்க விவசாயிகளுக்கு அனுமதி
உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் பணிகள் துவங்கின. உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை வாயிலாக, திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு, 1967ல், அணை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் பெறப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருப்பு செய்து, மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருமூர்த்தி அணை, 1.9 டி.எம்.சி., கொள்ளளவு உடையதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றாறுகள் மற்றும் காண்டூர் கால்வாய் வாயிலாக, அணைக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
இவ்வாறு, தண்ணீர் வரும் பகுதிகளில், அதிகளவு மண் தேங்கியுள்ளது. அணையின் நீர்த்தேக்க பகுதியில், பல அடிக்கு மண் மேடாக மாறியுள்ளது. இதனால், முழு கொள்ளளவில், அணையில் நீர் தேக்க முடியாமல், மண்டல பாசன நீர் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
மழைக்காலத்திலும் கூடுதலாக தண்ணீர் தேக்க முடியாமல், பாதிப்பு தொடர்கதையாக உள்ளது. திருமூர்த்தி அணையில், 300 ஏக்கர் பரப்பில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அள்ளி, கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நீர் நிலைகளை துார்வாரி, கூடுதல் நீர் சேமிக்கும் வகையில், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், தமிழக அரசு விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், இலவசமாக மண் எடுத்துக்கொள்ள அனுமதியளித்து வருகிறது.
திருமூர்த்தி அணையில் இத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து, 08 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள, கடந்த, 2024ல் அனுமதியளிக்கப்பட்டது. இதில், மழைப்பொழிவு, அணையில் நீர் தேக்கம் உள்ளிட்ட காரணங்களினால், 24 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டு, பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. எனவே, நடப்பாண்டும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, முதல் மண்டல பாசனம் நிறைவு பெற்று, அணை நீர்மட்டம் குறைந்த நிலையில், நேற்று முதல் விவசாயிகள் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, எடுத்தது போக மீதம் உள்ள, 82 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, நன்செய் நிலமாக இருந்தால், 75 கன மீட்டரும், புன்செய் நிலமாக இருந்தால், 90 கன மீட்டரும், மண்பாண்டம் செய்வோர், 60 கன மீட்டரும் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மண் எடுக்க, விருப்பம் உள்ள விவசாயிகள், இ–- சேவை மையங்களில், https://tnesevai.tn.gov.inவாயிலாக விண்ணப்பிக்கலாம்.’ என்றனர்.
