/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0': கிராமப்புற விவசாயிகள் ஏமாற்றம்
/
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0': கிராமப்புற விவசாயிகள் ஏமாற்றம்
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0': கிராமப்புற விவசாயிகள் ஏமாற்றம்
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0': கிராமப்புற விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மே 03, 2024 12:49 AM
திருப்பூர்;வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில், கிராமப்புற விவசாயிகளுக்கு நலன் பயக்கும் வகையில் திட்டமிடப்பட்ட 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' செயல் படுத்துவதில் இழுபறி நீடிக்கிறது.
மாநில அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில், கடந்தாண்டு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. இதில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளை ஒன்றாக இணைக்க திட்டமிடப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் விவசாய பரப்பு, அத்துறை சார்ந்து, பணியில் உள்ள அலுவலர்களின் விபரம் சேகரிக்கப்பட்டது.
அவ்வகையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' அமல்படுத்தப்படும் போது, உதவி வேளாண் அலுவலர்கள், 'உதவி வேளாண் விரிவாக்க அலுவலர்' எனவும், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், 'உதவி தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்' என்ற பெயரில் பதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு உதவி வேளாண் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலருக்கும், 3 முதல், 4 ஊராட்சிகளை உள்ளடக்கி, 1,200 எக்டர் விவசாய பரப்பு ஒதுக்கப்படும்.
அங்குள்ள விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழிற்நுட்ப பயிற்சி என அந்த பயிர் வளர்ச்சிக்குரிய முழுப்பொறுப்பை அந்த அலுவலர் தான் ஏற்க வேண்டும் எனவும், துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
'வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த பணிகளை, கிராம அளவில் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்படும் ஊராட்சிகளில், ஏதாவது ஒரு ஊராட்சியை, தலைமையிடமாக வைத்துக் கொள்ளலாம்' எனவும் விரிவாக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
வேளாண் துறையினர் கூறுகையில், 'உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டத்தில், களப்பணியில் ஈடுபடும் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை காட்டிலும், அவர்களுக்கு பணிகளை பிரித்து, மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் நிலையிலான பதவிகள் தான் மிக அதிகம். எனவே, அப்பதவிகளை இத்திட்டத்திற்குள் வரைமுறைப்படுத்தி, பணிகளை பகிர்ந்தளிப்பதில் உள்ள குழப்பம் தான், திட்டம் செயல்பாட்டுக்கு வர தாமதம் ஆகிறது,' என்றனர்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், கிராமப்புற விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.