/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாட்டம்
/
பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாட்டம்
பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாட்டம்
பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாட்டம்
ADDED : ஏப் 30, 2024 11:44 PM
திருப்பூர்:அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி எல்லையில் உள்ள புதுப்பாளையம் குளத்தில், புள்ளி மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. அப்பகுதி, ஆட்கள் நடமாவட்டம் குறைவான பகுதி என்பதால், மான்கள் அச்சமின்றி வசித்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தின் போது, குடிநீர் கிடைக்காமல் மான்கள் வெளியே வருகின்றன. மேய்ச்சல் கிடைக்காத அளவுக்கு வறட்சி ஏற்படுவதால், மான் கூட்டம், அப்படியே நகர்ந்து அருகே உள்ள ஊர்களுக்கு செல்கின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் கூட்டமாக சென்று, விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. கடந்த சில வாரங்களாக, கடும் வறட்சி ஏற்பட்டு வருவதால், மான்கள், நொய்யல் ஆற்றங்கரையில் முகாமிட்டுள்ளன.
இரவு துவங்கியதும், மான்கள் நொய்யல் கரையோரமாக உள்ள புதர்களில் தங்கிவிடுகின்றன. அங்கு தண்ணீரை பருகிவிட்டு, அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று, சோளப்பயிர்களை மேய்ந்து நாசப்படுத்துகின்றன. இதேநிலை தொடர்ந்தால், எவ்வித பயிர்சாகுபடியும் செய்ய முடியாது. ஆடு, மாடுகளுக்கான தீவனங்களை கூட பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
கோடை வறட்சி காரணமாக, மான்கள் நொய்யல் ஆற்றில் முகாமிடுகின்றன. சாமளாபுரம் வரை சென்று, அருகே உள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்திவிடுகின்றன. தீவன பற்றாக்குறையை சமாளிக்க, சோளப்பயிர் சாகுபடி செய்திருந்த இடங்களில், மான்கள் அழித்து விடுகின்றன. வாழைகளையும் காப்பாற்ற முடிவதில்லை.
வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பாளையம் குளத்தில் போதிய தண்ணீர், தீவன வசதியை ஏற்படுத்தினால், மான்கள் அங்கிருந்து வெளியேறுவதை தடுக்கலாம். ஒவ்வொரு முறையும் இழப்பீடு கேட்க முடியாது; நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.