/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை விவசாயிகள் வலியுறுத்தல்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை விவசாயிகள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை விவசாயிகள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2024 12:57 AM

உடுமலை;அரசு கொள்முதல் செய்த கொப்பரை விற்பனை செய்தால், வெளி மார்க்கெட்டில் தேங்காய் விலை கடும் சரிவை சந்திக்கும். எனவே, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும், என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலையில், தென்னை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கேரளா வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னைக்கு சரியான மருந்து கண்டறியப்படாததால், விவசாயிகள் பெருமளவு பாதித்து வருகின்றனர். கேரளா அரசு விவசாயிகளிடமிருந்து, உரித்த பச்சை தேங்காயை கொள்முதல் செய்வது போல், தமிழக அரசும் செய்ய வேண்டும்.
மத்திய அரசு, 'நேபட்' நிறுவனம் வாயிலாக, கொப்பரை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளது. இதனை குறைந்த விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கினால், வெளிச்சந்தையில் தேங்காய் விலை கடும் சரிவை சந்திக்கும். எனவே, கொப்பரை தேங்காயை எண்ணெய்யாக மாற்றி, ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
மலேசியா, இந்தோனியா ஆகிய நாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில், ரேஷன் கடைகளில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும்.
தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள், பேரிடர், நோய் தாக்குதல் ஏற்பட்டு பாதித்தால், உரிய காப்பீடு மற்றும் இழப்பீடு வழங்கவும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு உரிய தொழில் நுட்ப உதவி வழங்கவும், அரசு திட்டங்களில் முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளும் பங்கேற்படை உறுதி செய்ய வேண்டும்.
தென்னை ஊட்டச்சத்து டானிக், கோவை வேளாண் பல்கலையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், நுண்ணுாட்டசத்து, இடுபொருட்கள் வழங்குவது போல், தென்னை டானிக் மானிய விலையில் வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், உடுமலையில், மாவட்ட அளவிலான தென்னை விவசாயிகள் கருத்தரங்கம் நடந்த அரங்கிற்கு வெளியில், நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் மந்த்ராச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர் விஜயசேகரன், மடத்துக்குளம் செந்தில்குமார், குடிமங்கலம் குப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.