/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
/
இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
ADDED : செப் 01, 2024 02:32 AM

திருப்பூர்;வெள்ளகோவில் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், வெறிநாய் மற்றும் தெருநாய் தொல்லை அதிகரித்தது. இந்த கிராமப்புறங்களில், கடந்த ஆறு மாதங்களில், 2 ஆயிரம் ஆடுகளை வெறிநாய் கடித்து, பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பை அருகே, ஒரே இடத்தில் ஏழு ஆடுகளை தாக்கி, வெறிநாய்கள் கொன்றுள்ளன. அதே பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், 20 ஆடுகள், நாய்களால் பலியாகின. நாய்களை அகற்ற முற்பட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெருநாய்களிடம் இருந்து, ஆடுகளை காப்பாற்ற போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். நாய்கள் கடித்து, ஆடுகள் இறப்பதை தடுக்க, சரியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர்.இறந்த ஆடுகளுடன் வந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன்பு, ஏழு இறந்த ஆடுகளை வைத்து, போராட்டம் நடத்தினர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே திரும்பி செல்வோம் என்று அறிவித்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் பங்கேற்றன. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, கலெக்டர், நிர்வாகிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
---
கலெக்டர் அலுவலகம் முன், இறந்த ஆடுகளுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள்.