/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மவுசு கூடுது மக்காச்சோளத்துக்கு... சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; விலை உயர்வால் பரப்பு அதிகரிப்பு
/
மவுசு கூடுது மக்காச்சோளத்துக்கு... சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; விலை உயர்வால் பரப்பு அதிகரிப்பு
மவுசு கூடுது மக்காச்சோளத்துக்கு... சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; விலை உயர்வால் பரப்பு அதிகரிப்பு
மவுசு கூடுது மக்காச்சோளத்துக்கு... சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; விலை உயர்வால் பரப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 21, 2024 11:48 PM

உடுமலை : உடுமலை பகுதிகளில், மழையும், விலையும் அதிகரித்துள்ளதால், மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நடப்பு சீசனில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி மற்றும் உணவு பொருட்கள் உற்பத்திக்கு, பிரதான மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கறிக்கோழி உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ள நிலையில், இதன் சாகுபடியும் அதிகளவு இருந்தது. தற்போது, எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பிரதானமாக உள்ளதால், இதற்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், பி.ஏ.பி.,பாசனம், அமராவதி பாசனம், இறவை மற்றும் மானாவாரியாக, 10 ஆயிரம் ஹெக்டேர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல், அமராவதி அணையிலிருந்தும், பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளதால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது, மக்காச்சோளத்துக்கான விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக, குவிண்டால், 2,900 முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை விற்று வருகிறது. மக்காச்சோளத்திற்கான விலை உயர்ந்துள்ளநிலையில், மழையும் நல்ல முறையில் பெய்து வருவதால், இந்த சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மற்ற பயிர் சாகுபடியை காட்டிலும், மக்காச்சோளம் சாகுபடியில் பயிர் பராமரிப்பு மற்றும் மழை பெய்தாலும் தாங்கும் பயிர் என்பதாலும் தற்போது சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
மக்காச்சோளம் தீவன உற்பத்திக்கு மட்டுமின்றி, எத்தனால் உற்பத்திக்கும் மூலப்பொருளாக உள்ளதால், தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது.
இதனால், உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் நடவு தற்போது அதிகரித்துள்ளது. வழக்கமாக, 3,500 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும், 500 ஹெக்டேர் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.
குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குவர் வசந்தா கூறியதாவது:
நடப்பாண்டு மழையும் திருப்தியாக பெய்து வருகிறது. வட கிழக்கு பருவ மழையும் இயல்பை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மற்ற பயிர்களை காட்டிலும்,மக்காச்சோளம் மழை பெய்தாலும், தாங்கி வளரும்.
அதே போல், களை எடுத்தல், உரம் என பராமரிப்பு செலவுகளும் குறைவாக உள்ளது. குடிமங்கலம் வட்டாரத்தில், வழக்கமாக, 3,500 ஹெக்டேர் வரை சாகுபடி உள்ள நிலையில், நடப்பு சீசனில், 4,500 ஹெக்டேர் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, உழவின் போது, வேப்பம்புண்ணாக்கு, வரப்பு பயிர், விதை நேர்த்தி உள்ளிட்ட சாகுபடி தொழில் நுட்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, வீரிய ஒட்டு ரக விதைகள் அதிகளவு வந்துள்ளதோடு, பயிர்களுக்கு தேவையான உரம் வழங்கி, பராமரித்தால், அதிக மகசூல் பெற வாய்ப்புள்ளது. சராசரியாக, ஏக்கருக்கு, 35 முதல், 40 குவிண்டால் வரை மகசூல் கிடைத்து வருகிறது.
முறையாக உரம் வழங்கி, பராமரித்த விவசாயிகள் பலர், ஏக்கருக்கு, 50 குவிண்டால் வரை மகசூல் எடுத்துள்ளனர். விவசாயிகள் அதிக லாபம் பெற, சாகுபடி தொழில் நுட்பங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.